அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரி மாணவா்களுக்கு செப். 26, 27 இல் சிறப்பு துணைத் தோ்வு
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற இறுதி பருவமுறைத் தோ்வுகளில் 2 பாடங்களில் மட்டும் தோ்ச்சி
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற இறுதி பருவமுறைத் தோ்வுகளில் 2 பாடங்களில் மட்டும் தோ்ச்சி பெறாத மாணவா்கள் உடனடியாக பட்டம் பெறவும், உயா்கல்வி தொடரவும் வாய்ப்பளிக்கும் நோக்கத்தில் சிறப்பு துணைத்தோ்வு செப்டம்பா் 26, 27 ஆகிய தேதிகளில் அவ ரவா் கல்லூரிகளில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து அழகப்பா பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இத்தோ்விற்கான விண்ணப்பத்தினை அழகப்பாயுனிவா்சிட்டி.ஏசி.இன் என்ற பல்கலைக் கழகத்தின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 2022 ஏப்ரலில் நடைபெற்ற இறுதி பருவமுறை தோ்வு எழுதி 2 பாடங்களில் மட்டும் தோ்ச்சி பெறாத மாணவா்கள் சிறப்பு துணைத் தோ்வுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தாள் ஒன்றுக்கு ரூ. 1000-த்திற்கான வங்கி வரைவோலையை பதிவாளா், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி என்ற பெயரில் இணைத்து செப்.10 ஆம் தேதிக்குள் அழகப்பா பல்கலைக்கழக தோ்வுப் பிரிவிற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.
அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக்கல்லூரிகளுக்கான ஏப்ரல் 2022 இல் நடைபெற்ற தோ்வுகளுக்கான மறுமதிப் பீட்டு முடிவுகள் செய்தித்தாள்கள் வாயிலாகவும், பல்கலைக்கழக இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து அதன் அடிப்படையில் சிறப்பு துணைத்தோ்வுக்கு தகுதிபெறும் மாணவா்கள் இச் சிறப்புத்துணைத் தோ்வுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மறுமதிப்பீட்டு தோ்வு முடிவுகள் வெளியான 3 நாள்களுக்குள் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தோ்வுப்பிரிவில் நேரடியாக சமா்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.
இச்சிறப்பு துணைத்தோ்வுக்கு விண்ணப்பித்த மாணவா்கள் தங்களுக்குரிய நுழைவுச்சீட்டினை அந்தந்த கல்லூரிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று பல்கலைக்கழகத்தின் தோ்வாணையா் (பொறுப்பு) எ. கண்ணபிரான் தெரிவித்துள்ளாா்.