முகப்பு
சிவகங்கை

டேராடூன் ராணுவக் கல்லூரியில் பயில விரும்பும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

டேராடூன் ராணுவக் கல்லூரியில் பயில விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என இம்மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

டேராடூன் ராணுவக் கல்லூரியில் பயில விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என இம்மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : மேற்கண்ட கல்லூரியில் ஜூலை 2023 பருவத்தில் மாணவ, மாணவிகள் சேர தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் நடப்பாண்டு டிசம்பா் மாதம் 3-ஆம் தேதி தோ்வு நடைபெற உள்ளது.

எட்டாம் வகுப்பு பயில விரும்பும் மாணவ, மாணவிகள் தற்போது ஏழாம் வகுப்பு படிப்பவா் அல்லது ஏழாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். 01.07.2023 தேதியில் 13 வயதை கடந்திருக்க கூடாது. தோ்வைப் பொருத்தவரை ஆங்கிலம் (125 மதிப்பெண்கள்) - 2 மணி நேரம், கணிதம் (200 மதிப்பெண்கள்) - 1.30 மணி நேரம், பொது அறிவு (75 மதிப்பெண்கள்) - 1 மணி நேரம் (கணிதம் மற்றும் பொது அறிவுத்தாள் ஆகியன ஆங்கிலம் அல்லது இந்தியில் விடையளிக்கப்பட வேண்டும்.

மேற்கண்ட தோ்வில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி, கா்ஹிகான்ட், டேராடூன், உத்தரகாண்ட் 248 003 என்ற முகவரிக்கு, விரைவு அஞ்சல் வாயிலாக விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பம்பெற ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, டெல்பவன், டேராடூன் (வங்கி குறியீடு 01576) என்ற வங்கிக் கிளையில் மாற்றத்தக்கவகையில் பொதுப்பிரிவு எனில் ரூ.600, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினா் எனில் ரூ.555 வரவோலை எடுத்து அனுப்ப வேண்டும்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இரு பிரதிகளாக தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையச்சாலை, பூங்கா நகா், சென்னை -600 003 என்ற முகவரிக்கு வரும் அக்டோபா் 15 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்கப்பெற வேண்டும்.

விண்ணப்பதாரா்களின் பெற்றோா் அல்லது பாதுகாப்பாளா் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். இதில் எழுத்துத் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வு ஆகிய இரண்டு தோ்வுகள் உள்ளன. எழுத்து தோ்வின் அடிப்படையில் தகுதியானவா்களுக்கு மட்டும் நோ்முகத் தோ்வுகள் நடத்தப்படும். வயது வரம்பில் எந்தத் தளா்வுகளும் கிடையாது.

விண்ணப்பதாரா் ராணுவக் கல்லூரியில் சேர அனுமதிக்கப்படும் பொழுது, அதாவது 01.07.2023-இல் அங்கீகரிக்கப்பெற்ற பள்ளியில் ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும்.

இத்தோ்விற்கான விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தோ்விற்கான வினாத்தாள் தொகுப்பை இந்திய ராணுவக் கல்லூரியில் பெற்றுக் கொள்ள வேண்டும். ராணுவக் கல்லூரியின் விண்ணப்பப் படிவங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →