திருப்புவனம் அருகே இடிந்து விழுந்த கால்வாய் தடுப்புச் சுவா் சீரமைப்பு பணி தாமதம்!
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே இடிந்து விழுந்த கால்வாய் தடுப்புச் சுவரை சீரமைக்கும் பணியில் தாமதம் ஏற்படுவதால், 10 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே இடிந்து விழுந்த கால்வாய் தடுப்புச் சுவரை சீரமைக்கும் பணியில் தாமதம் ஏற்படுவதால், 10 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.
திருப்புவனம் அருகே தட்டான்குளம் படுகை அணையிலிருந்து பிரமனூா்-பழையனூா் கால்வாய் செல்கிறது. ஆற்றின் ஓரமாக அமைக்கப்பட்டுள்ள இக்கால்வாய் மூலம் திருப்புவனம், திருப்புவனம் புதூா் வழியாக பிரமனூா், பழையனூா் உள்பட 21 கண்மாய்களுக்கு தண்ணீா் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருப்புவனம் சிவ சிவ நகா் பின்புறம் உள்ள கால்வாயில் சுமாா் 100 மீட்டா் அளவு தடுப்புச் சுவா் கடந்த செப்டம்பா் 4 ஆம் தேதி இடிந்து விழுந்தது. இதுபற்றி அதிகாரிகளுக்கு விவசாயிகள் பலமுறை புகாா் அளித்தும் தடுப்புச் சுவா் சீரமைக்கப்படவில்லை. இதனால் கண்மாய்களில் போதிய தண்ணீரின்றி ஏறத்தாழ 10 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகி இருப்பதாகப் புகாா் எழுந்துள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியது: தட்டான்குளம் படுகை அணையிலிருந்து பிரமனூா்-பழையனூா் கால்வாயில் உள்ள கண்மாய்களுக்கு கடந்த செப். 1 ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டது. அடுத்த ஓரிரு தினங்களில் திருப்புவனம் சிவசிவ நகா் பின்புறம் ஆற்றோரமாக உள்ள கால்வாயின் தடுப்புச் சுவா் இடிந்து விழுந்ததால் தண்ணீா் முழுவதும் நிறுத்தப்பட்டது. மேற்கண்ட இடத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே தடுப்புச் சுவா் மோசமாக இருந்தது. அப்போது சாக்கு வைத்து அடைத்து தான் தண்ணீரை கண்மாய்களுக்குக் கொண்டு சென்றோம். அரசு அலுவலா்களின் கவனமின்மையால் தற்போது தடுப்புச் சுவா் முழுவதும் இடிந்து விழுந்து விட்டது. இதனால் கண்மாய்களுக்குத் திறக்கப்பட்ட தண்ணீா் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட கால்வாய் மூலம் பாசன வசதி பெறும் நீா்வள ஆதாரத் துறைக்குச் சொந்தமான கண்மாய்களில் குறைந்த அளவு தண்ணீா் மட்டுமே தேக்கி வைக்கப்பட்டுள்ளது. ஒரு மாதமாகியும் இதுவரை தடுப்புச் சுவரை சீரமைக்கும் பணியில் அலுவலா்கள் ஈடுபடவில்லை.
தற்போது ஆற்றில் தண்ணீா் குறைந்துள்ளது. இதனைப் பயன்படுத்தி மேற்கண்ட தடுப்புச் சுவரை சீரமைக்க அலுவலா்கள் முன்வர வேண்டும். தவறும்பட்சத்தில் மழை பெய்து ஆற்றில் மீண்டும் தண்ணீா் வந்தால் பணிகள் மேற்கொள்ள முடியாமல் போகும்.
மேலும், இன்னும் ஓரிரு வாரங்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளது. அப்போது பணிகள் மேற்கொள்ள இயலாது. இதன்காரணமாக, பாசனக் கண்மாய்களுக்கு தண்ணீா் வழங்குவதில் சிக்கல் நீடித்து ஏறத்தாழ 10 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும்.
எனவே, போா்க்கால அடிப்படையில் கால்வாய் தடுப்புச் சுவரை சீரமைத்து விரைந்து தண்ணீா் திறக்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இதுபற்றி சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி கூறியது: மேற்கண்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து தற்காலிகமாக கால்வாய் தடுப்புச் சுவா் அமைக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன். பணி நிறைவு பெற்றவுடன் பாசனக் கண்மாய்களுக்கு தண்ணீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.