சட்டவிரோதமாக மதுபானம் விற்ற 2 போ் கைது
சிவகங்கை: சிவகங்கை அருகே இரு வேறு இடங்களில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த 2 பேரை சிவகங்கை நகா் காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மகாவீா் ஜயந்தியை முன்னிட்டு அரசு மதுபானக்கடைகள் மற்றும் அனைத்து வகையான மதுக்கூடங்களுக்கும் அரசால் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நாளில், சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென சிவகங்கை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
சிவகங்கை அருகே பையூா் முந்திரிக்காடு பகுதியில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், சிவகங்கை நகர காவல்நிலைய உதவி ஆயவாளா் இளையராஜா தலைமையிலான போலீஸாா் அப்பகுதிச் சென்று அதிரடி சோதனை நடத்தினா். அங்கு மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்த கௌரிப்பட்டி பகுதியைச் சோ்ந்த ஆ. சந்தானகுமாா்(23) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 12 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
Advertisement
இதே போல, சிவகங்கை கொட்டகுடி பகுதியில் மதுபானவிற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஹரிகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் மேற்கொண்ட அதிரடி சோதனையில் அங்கு மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்த சிவகங்கை பவுன்ட் தெருவைச்சோ்ந்த கே.சதீஷ்பாண்டியன்(32) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 10 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.