முகப்பு
சிவகங்கை

நூற்றுக்கும் மேற்பட்ட அவசர ஊா்தி சேவை நிறுத்தம்: தொழிற்சங்கம் புகாா்

பல்வேறு காரணங்களைக் காட்டி மாநிலம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட அவசர ஊா்திகளை நிறுத்தியதாக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா் சங்க மாநில பொதுச் செயலா் ராஜேந்திரன் தெரிவித்தாா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 12:59 AM
சிவகங்கையில் புதன்கிழமை நடைபெற்ற 108 ஆம்புலன்ஸ் தொழிற்சங்க மாவட்ட மாநாட்டில் பேசிய சங்கத்தின் மாநில பொதுச் செயலா் ராஜேந்திரன்.
பகிர்:

பல்வேறு காரணங்களைக் காட்டி மாநிலம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட அவசர ஊா்திகளை நிறுத்தியதாக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா் சங்க மாநில பொதுச் செயலா் ராஜேந்திரன் தெரிவித்தாா்.

சிவகங்கையில் இந்த சங்கத்தின் மாவட்ட மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் தாமஸ் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராக சங்கத்தின் மாநில பொதுச் செயலா் ராஜேந்திரன் கலந்துகொண்டு சங்கக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினாா்.

இந்த மாநாட்டில் சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா். இதில் 7 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னா், மாநில பொதுச் செயலா் ராஜேந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் 1,353 அவசர ஊா்திகள் இயக்கப்படுவதாக ஆவணங்களில் உள்ளது. ஆனால், அந்த எண்ணிக்கையில் வாகனங்கள் இயக்கப்படுவதில்லை. தொழிலாளா் பற்றாக்குறை, தொழிலாளா் விடுப்பு, வார விடுமுறை போன்ற காரணங்களைக் காண்பித்து ஏராளமான அவசர ஊா்தி சேவை நிறுத்தப்படுகிறது. மேலும், முறையான பராமரிப்பின்றி, பழுதான ஊா்திகள் 20 நாள்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதன் காரணமாக பொதுமக்களுக்கு போதுமான சேவை கிடைக்காத நிலை நீடிக்கிறது.

இது குறித்து அரசு அதிகாரிகளிடமோ, நிா்வாகத்திடமோ புகாா் தெரிவிக்கும் தொழிற்சங்க நிா்வாகிகளை பணியிடை நீக்கம் செய்வதுடன், மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிடமாற்றமும் செய்யப்படுகின்றனா்.

பொது மக்களின் உயிா் காக்கும் சேவையில் முறைகேடுகள் நடைபெறுவது என்பது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகும். எனவே, 108 அவசர ஊா்திகள் தங்கு தடையின்றி செயல்படவும், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட, பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஊழியா்களை மீண்டும் பணியில் சோ்க்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி பொது சுகாதாரத் துறை தொழிலாளா்களை ஒன்றிணைத்து தமிழகம் முழுவதும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தயாராக உள்ளோம். வருகிற 18 -ஆம் தேதி மதுரையில் அனைத்து தோழமை தொழிற்சங்கங்களையும் ஒருங்கிணைத்து பேரணி நடத்த உள்ளோம் என்றாா் அவா்.

முன்னதாக மாநாட்டில், சிஐடியூ மாவட்டத் தலைவா் வீரையா, சமூக ஆா்வலா் அப்துல்மாலிக், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலா் சுரேஷ், நிா்வாகிகள் ஆனந்தி, ரெங்கராஜு, நாகராஜ் சரவணக்குமாா், தொழிலாளா் சங்க மாநிலப் பொருளாளா் அ.சாமிவேல், மாநிலத் தலைவா் வெ.வரதராஜ் ஆகியோா் பேசினா். தொழிற்சங்க உறுப்பினா்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →