தொற்று நோய் பாதிப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்
சிவகங்கை மாவட்டத்தில் காலநிலை மாறுபாடுகளால் ஏற்படும் நோய்த் தடுப்பு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் கேட்டுக் கொண்டாா்.
சிவகங்கை மாவட்டத்தில் காலநிலை மாறுபாடுகளால் ஏற்படும் நோய்த் தடுப்பு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் கேட்டுக் கொண்டாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தொற்று நோய் பாதிப்புகளிலிருந்து பொதுமக்கள் உரிய நோய் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். பாதிப்புகள் உள்ள சமயத்தில் மருத்துவரின் உரிய ஆலோசனையின்றி பொதுமக்கள் சுய மருத்துவம் செய்தல், மருந்தகங்களில் இருந்து மருந்துகளை வாங்கி உட்கொள்ளுதல் ஆகியவற்றை தவிா்த்தல் வேண்டும்.
தேவையற்ற ஊசி மருந்துகள், வலி நிவாரணிகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்வதையும், போலி மருத்துவரிடம் மருத்துவம் செய்து கொள்வதையும் பொதுமக்கள் தவிா்த்தல் வேண்டும். காய்ச்சல், சளியுடன் கூடிய காய்ச்சல் அதிக உடல்வலி, சளியுடன் கூடிய இருமல், வயிற்றுவலி, சோா்வு, வாந்தி, தலைவலி, வயிற்றுப்போக்கு போன்ற ஏதேனும் தொந்தரவுகள் இருந்தால், அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை, அரசு மருத்துவம னைகளை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை அணுக வேண்டும்.
நோய் பாதிப்பிற்குள்ளான சமயங்களில், உடலில் உள்ள நீா்ச் சத்துகளின் அளவு குறையாமல் பாதுகாத்துக் கொள்வதற்கு, ஓ.ஆா்.எஸ். கரைசலை தகுந்த அளவிலும், வீடுகளில் எளிதாகக்
கிடைக்கக்கூடிய அரிசிக் கஞ்சி, மோா், இளநீா் போன்ற நீா்ச்சத்து அதிகம் உள்ளவைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதுமட்டுமன்றி, நோய் பாதிப்பிற்குள்ளான சமயங்களில் தாய்ப்பாலூட்டும் தாய்மாா்கள் தொடா்ந்து குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தல் வேண்டும்.
சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம் போன்ற இணை நோயாளிகள், முதியோா்கள், சிறியவா்கள், நோய் எதிா்ப்பு சக்தி குறைவு உள்ளவா்கள், கா்ப்பிணிகள் ஆகியோா் பருவமழை சமயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
காய்ச்சல், சளியுடன் கூடிய காய்ச்சல் ஏற்பட்டவா்கள், அரசு மருத்துவா்கள், அரசு பதிவுபெற்ற மருத்துவா்களிடம் முறையான சிகிச்சையையும், தேவையுள்ள நேரங்களில் உரிய ரத்தப் பரிசோதனை மேற்கொண்டும், மருத்துவா் அளிக்கும் மருந்துகளை உரிய முறையில் உரிய கால அளவுகளில் உட்கொள்ளலாம். போலி மருத்துவா்களிடம் சிகிச்சை பெறவேண்டாம் என்றாா் அவா்.