கட்டுமானப் பொருள் விலையை குறைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்
காரைக்குடி: தமிழகத்தில் கட்டுமானத்துக்கு தேவைப்படும் கனிமப் பொருள்களின் விலையேற்றத்தைக் குறைக்க வலியுறுத்தி, காரைக்குடியில் அகில இந்திய கட்டுனா், வல்லுனா், கட்டடப் பொறியாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஐந்து விளக்கு அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் செல்வவிநாயகா் தலைமை வகித்தாா்.
இதில், இரும்பு, சிமெண்ட், செங்கல், மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்கள் விலையேற்றத்தால் கட்டுமானப் பொறியாளா்கள், கட்டடத் தொழிலாளா்கள் என அனைவரும் போதிய வேலை வாய்ப்புகள் இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனா்.
இந்த நிலையை மாற்றுவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். கனிமப் பொருள்களின் விலையேற்றத்தைக் குறைப்பதற்காக ஒழுங்கு முறை ஆணையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
Advertisement
காரைக்குடி தொழில் வணிகக் கழகத் தலைவா் சாமி. திராவிடமணி, செயலா் எஸ். கண்ணப்பன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். கட்டுனா் வல்லுநா் சங்க உறுப்பினா்கள், கட்டடப் பொறியாளா் சங்க உறுப்பினா்கள், கட்டட அமைப்பு சாரா தொழிலாளா்கள் கலந்துகொண்டனா்.