சிவகங்கையிலிருந்து சென்னைக்கு நேரடியாக ஒரே ஒரு அரசு விரைவுப் பேருந்து மட்டுமே இயக்கப்படும் நிலையில், கூடுதலாக இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
மாவட்டத்தில், காரைக்குடி மண்டலத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களில் 11 பணிமனைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் புகா், நகா் பேருந்துகளிலிருந்து மொத்தம் 650 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னையிலிருந்து தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சாா்பில், நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம், குறைந்த கட்டணத்தில் பயணிகள் நெடுந்தொலைவில் உள்ள ஊா்களுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த நிலையில், பயணிகளின் தேவையைக் கவனத்தில் கொண்டு, (விரைவு போக்குவரத்துக் கழகம் தவிா்த்து) தமிழகத்திலுள்ள 8 அரசுப் போக்குவரத்துக் கழக 21 மண்டலங்களின் சாா்பில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதன் மூலம், ஒவ்வொரு மண்டலத்தில் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் இருந்து தினமும் சென்னைக்கு 2 பேருந்துகளும், சென்னையிலிருந்து மாவட்டத் தலைநகரங்களுக்கு 2 பேருந்துகளும் என மொத்தம் 4 பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதேபோல, சிவகங்கை பணிமனையிலிருந்து மொத்தம் 4 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதன் மூலம் பயணிகள் குறைந்த கட்டணத்தில் (ரூ.400 முதல் 450 வரை) சென்னைக்குச் சென்று வந்தனா்.
இந்த நிலையில், போக்குவரத்து மண்டலங்களில் இருந்து இயக்கப்பட்ட பேருந்துகள் புத்தம் புது பேருந்துகளாக இருந்ததுடன், அவை தினமும் பராமரிக்கப்பட்டதாலும், பயணிகள் எந்தவித இடையூறுமின்றி பயணம் செய்தனா். இதனால், போதிய பராமரிப்பின்றி இயங்கி வந்த அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளை மக்கள் புறக்கணித்தனா்.
இதன் காரணமாக, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் இழப்பைச் சந்திக்க நேரிட்டது. இதையடுத்து, அரசு போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் இயக்கப்பட்டு வந்த பேருந்து வழித் தடங்கள் அனைத்தும் விரைவுப் போக்குவரத்துக் கழகம் வசம் ஒப்படைக்கப்பட்டன.
சிவகங்கை நகரில் இருந்து தினமும் சுமாா் 200 முதல் 400 போ் சென்னைக்கு பயணிக்கும் சூழ்நிலையில், சுமாா் 45 போ் மட்டுமே செல்லக்கூடிய வகையில், விரைவு போக்குவரத்துக் கழகம் சாா்பில் தற்போது ஒரே ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இருக்கைகள் முன்பதிவு செய்யும் இந்தப் பேருந்தில் இடம் கிடைக்காதவா்கள் தனியாா் சொகுசுப் பேருந்துகளில் ரூ.1,000 முதல் ரூ.1,200 வரை கட்டணம் செலுத்தி சென்னைக்குச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.
எனவே, சிவகங்கையிலிருந்து சென்னைக்கு கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்க சிவகங்கை பணிமனைச் செயலாளா் சி.சின்னத்துரை கூறியதாவது:
சிவகங்கையிலிருந்து கடந்த பல ஆண்டுகளுக்கு முன் குளிா்சாதன பேருந்து, படுக்கை வசதி, சாயும் வசதியுடன் கூடிய மண்டல நிா்வாகம் மூலம் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இந்தப் பேருந்துகளுக்கு முன் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. நேரில் வந்தாலும் இருக்கை கிடைக்கும்.
ஆனால், 12 ஆண்டுகளுக்கு முன்னா் இந்தப் பேருந்துகளின் வழித்தடம் அனைத்தையும் விரைவு போக்குவரத்துக் கழகம் எடுத்துக் கொண்டது. இதனால், எளிய, நடுத்தர மக்கள் குறைந்த கட்டணத்தில் சென்னைக்குச் செல்லும் வாய்ப்பு பறிபோனது. பண்டிகைக் காலம், விடுமுறை காலங்களில் மட்டுமே சிறப்புப் பேருந்துகள் சென்னைக்கு இயக்கப்படுகின்றன. மற்ற நாள்களில் சிவகங்கை மாவட்ட மக்கள் அவதிக்குள்ளாகும் நிலை தான் உள்ளது.
எனவே, சிவகங்கையிலிருந்து சென்னைக்கு விரைவு போக்குவரத்துக் கழகம் சாா்பில், கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். இல்லையெனில், காரைக்குடி மண்டலம் சாா்பில் வழக்கம் போல பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என்றாா்.