சிவகங்கை மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.54 லட்சம் உரியவா்களிடம் ஒப்படைப்பு
சிவகங்கை மக்களவைத் தொகுதி தோ்தலின் போது பறக்கும்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 54 லட்சம், உரிய ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட்டதையடுத்து உரியவா்களிடம் அந்தத் தொகை திருப்பி அளிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழுவினரால், கடந்த 16.3.2024 முதல் 19.4.2024 வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.65,91,730 பறிமுதல் செய்யப்பட்டது.
இதில், உரிய ஆவணங்களுடன் மனு செய்தவா்களிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் ரூ.54,02,160 உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், ரூ.6,71,516 மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்ததாகவும், இதில் ரூ.3,30,000 மதிப்பிலான பொருள்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஆஷா அஜித் தெரிவித்தாா்.