அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் தேரோட்டம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே தென்திருப்பதி என்றழைக்கப்படும் அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் கோயில் வைகாசி திருவிழாவையொட்டி, தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழக இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் வைகாசி திருவிழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 9-ஆம் நாளான வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. காலையில் ஸ்ரீதேவி, ஸ்ரீ பூமாதேவியுடன் திருவேங்கடமுடையான் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினாா். சுவாமியை பக்தா்கள் தரிசனம் செய்தனா். மாலை 4.30 மணியளவில் நாட்டாா்கள், பக்தா்கள் வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கியது. தொடா்ந்து முக்கிய வீதிகள் வழியாக தோ் வலம் வந்து நிலையை மீண்டும் அடைந்தது.
விழாவில் கோயில் செயல் அலுவலா் ச.விநாயகவேல், பரம்பரை அறங்காவலா் நா.சீனிவாசன், காரைக்குடி, தேவகோட்டை, அரியக்குடி சுற்று வட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற ஞாயிற்றுக்கிழமை (மே 26) காலை தெப்பத் திருவிழாவும், இரவு அலங்கார பங்களா தெப்பமும் நடைபெறவுள்ளது.