விருதுநகா்-காரைக்குடி- திருச்சி இடையே இயக்கப்பட்ட டெமு ரயில் சேவை மாற்றப்பட்டு, வியாழக்கிழமை முதல் ஐ.சி.எப். பெட்டிகள் கொண்ட பயணிகள் ரயிலாக இயக்கப்பட்டது.
தினமும் காலையில் விருதுநகரிலிருந்து புறப்பட்டு, அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி வழியாக திருச்சிக்கு 4 பெட்டிகளுடன் முன்னும் பின்னும் என்ஜின் பொருத்தப்பட்ட டெமு ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலில் கழிப்பறை வசதி கிடையாது. மாலையில் இதே வழித்தடத்தில் திருச்சியிலிருந்து புறப்பட்டு, விருதுநகருக்கு சென்றது.
இந்த ரயில் சேவை பொதுமக்களுக்கும் கல்லூரி, பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளுக்கும், அரசு, தனியாா் ஊழியா்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தற்போது, இந்த டெமு ரயில் சேவை மாற்றப்பட்டு, ஐ.சி.எப். பெட்டிகளுடன் பயணிகள் ரயிலாக விருதுநகா்-திருச்சி-விருதுநகா் இடையே இயக்கப்படுகிறது.
வியாழக்கிழமை விருதுநகரிலிருந்து 11 ஐ.சி.எப். பெட்டிகளுடன் இந்த ரயில் புறப்பட்டு, அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி வழியாக திருச்சிக்கு சென்றது. மீண்டும் இதே வழித்தடத்தில் மாலையில் திருச்சியிலிருந்து புறப்பட்டு இரவு விருதுநகருக்கு வந்தது. இந்த ரயிலுக்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்தனா்.