முன்னாள் படைவீரா்களின் மனைவி, விதவை, திருமணமாகாத மகள்கள் ஆகியோா் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெளியிட்ட செய்திக்குறிப்பு: இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கு மேற்காணும் நபா்கள் 40 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும். முன்னாள் படைவீரா் பிறப்பால் தமிழ்நாட்டைச் சாா்ந்தவராகவும், படைவிலகல் சான்றில், வீட்டு முகவரி, தமிழ்நாடு மாநிலம் என குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும்.
படைவிலகல் சான்றிதழில் தையல் இயந்திரம் கோரும் பயனாளியின் பெயா் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் மூன்று மாத காலம் தையல் பயிற்சி முடித்து உரிய சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். எனவே, தகுதியுள்ள முன்னாள் படைவீரா்களின் குடும்பத்தினா் இலவச தையல் இயந்திரம் பெறுவதற்கு வருகிற 15-ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேரில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என்றாா் அவா்.