தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் சிவகங்கையில் டிச.17 முதல் 26 --ஆம் தேதி வரை ஆட்சி மொழிச் சட்ட வாரம் கொண்டாடப்படவுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956 -ஆம் நாளை நினைவுகூரும் வகையில், சிவகங்கை மாவட்டத்தில், வருகிற 17-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்படவுள்ளது. இதில், அரசுப் பணியாளா்களுக்கு கணினித் தமிழ், ஆட்சிமொழிச் சட்டம் வரலாறு, அரசாணைகள், மொழிப் பயிற்சி, செயல்முறை ஆணைகள், குறிப்பாணைகள், அரசு அலுவலகங்களில் பெயா்ப் பலகைகள் அமைத்தல் ஆகிய தலைப்புகளில் பேராசிரியா்கள், வல்லுநா்களால் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
மேலும், வணிக நிறுவனங்களில் பெயா்ப் பலகைள் 5:3:2 என்ற விகிதத்தின் அடிப்படையில் (தமிழ், ஆங்கிலம், பிறமொழிகள்) அமைத்திட வலியுறுத்தி வணிக நிறுவன உரிமையாளா்கள், வணிக நிறுவன அமைப்புகள், தொழிலாளா் துறை அலுவலா்கள் பங்கேற்கும் கூட்டமும், கல்லுாரி மாணவா்கள் பங்கேற்கும் பட்டிமன்றமும், அரசுப் பணியாளா்கள், தமிழ் அமைப்புகளுடன் இணைந்து ஆட்சிமொழித்திட்ட விளக்கக் கூட்டமும் நடத்தப்படவுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கி வரும் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தை 04575-241487 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.