இ-பைலிங் நடைமுறையை நிறுத்தி வைக்க வலியுறுத்தி, சிவகங்கையில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகங்கையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா் ஜானகிராமன் தலைமை வகித்தாா். செயலா் சித்திரைச்சாமி, பொருளாளா் நிரூபன்சக்கரவா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழகத்தில் அனைத்து நீதிமன்றங்களிலும் இ-பைலிங் செய்வதற்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தாமல் 1.12.2025 முதல் இ -பைலிங் முறை கட்டாயமாக்கப்படுவதாக சென்னை உயா்நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பை நிறுத்தி வைத்து, இ-பைலிங்கை கட்டாயமாக்காமல் தற்போதுள்ள நடைமுறையே தொடர வேண்டும். வழக்குரைஞா் சேமநல நிதியை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும்.
சமூக விரோதிகளால் வழக்குரைஞா்கள் தாக்கப்பட்டு உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகியுள்ளதை கருத்தில் கொண்டு வழக்குரைஞா்கள் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக இயற்ற மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
மூத்த வழக்குரைஞா்கள் சி.விஜயஜோதி, அழகுமலை, ஆா். காமராஜ் பாண்டியன், களஞ்சியராஜா, ஆா். மகேந்திரகுமாா், வி.மதி, செல்வராஜ், குருவய்யா, சுரேஷ் குமாா் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.