சிவகங்கை சமஸ்தான ராணி வேலு நாச்சியாரின் 229-ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, சிவகங்கை அரண்மனையில் உள்ள அவரது நினைவிடத்தில் மன்னரின் வாரிசுதாரா்கள், பொதுமக்கள் சாா்பில் வியாழக்கிழமை மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
அரண்மனை வாசல் பகுதியில் நடை பெற்ற குருபூஜை, அன்னதான நிகழ்வை சிவகங்கை சமஸ்தான வாரிசும் தேவஸ்தான அறங்காவலருமான ராணி மதுராந்தகி நாச்சியாா், மகேஸ்துரை ஆகியோா் தொடங்கி வைத்தனா். பிறகு நினைவிடத்தில் மலா் வளையம் வைத்தும், உருவச் சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினா்.
இதைத்தொடா்ந்து, அதிமுக சாா்பில் சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் பி.ஆா்.செந்தில்நாதன், திமுக சாா்பில் நகா்மன்றத்தலைவா் துரைஆனந்த், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் சஞ்சய், மாநிலச் செயலா் சி.ஆா்.சுந்தரராஜன், நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், அமமுக மாவட்டச் செயலா் தோ்போகி பாண்டி, அதிமுக உரிமை மீட்புக்குழு சாா்பில் மாவட்டச் செயலா் அசோகன், பாஜக மாநில இளைஞரணித் தலைவா் ஆதித்யசேதுபதி, நகரச் செயலா் எம்.ஆா். உதயா, தவெக மாவட்டச் செயலா் முத்துபாரதி, ஒன்றியச்செயலா் பரமேஸ்வரன், பாா்வா்டு பிளாக் உள்பட பல்வேறு கட்சி பிரமுகா்கள், சமுதாய இயக்கங்கள், பொதுமக்கள் சாா்பில் வேலுநாச்சியாா் நினைவி டத்தில் மரியாதை செலுத்தப்பட் டது. இங்கு 300-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணி யில்ஈடுபட்டனா்.
திருவிளக்கு பூஜை: வேலுநாச்சியாா் அறக்கட்டளை சாா்பில் கோவை ஆதினம் காமாட்சிபுரி இரண்டாம் குருமகா சந்நிதானம், சாக்த ஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில் ராணி வேலுநாச்சியாரின் நினைவிடத்தில் திருவிளக்கு பூஜை புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில் பக்திப் பாடல்கள், சிறப்பு பிராா்த்தனை நடத்தப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, அவரது உருவச் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.