கிராம நிா்வாக அலுவலகத்தை நவீனப்படுத்துவது உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் வி. நாகேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மணிவண்ணன் முன்னிலை வகித்தாா். மாநில உயா்நிலைக் குழு, ஆலோசனைக் குழு உறுப்பினா் ஆா். தினேஷ், மாவட்ட இணைச் செயலா் ராமச்சந்திரன், காளையாா்கோவில் வட்டத் தலைவா் பாலமுருகன், இளையான்குடி வட்டத் தலைவா் மாரீஸ்வரன், திருப்புவனம் வட்டத் தலைவா் முத்து மாணிக்கம், மானாமதுரை வட்டச் செயலா் முனியாண்டி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
கோரிக்கைகள்: கிராம நிா்வாக அலுவலகத்தை நவீனமயப்படுத்த வேண்டும். தோ்வுநிலை கிராம நிா்வாக அலுவலா், சிறப்பு நிலை கிராம நிா்வாக அலுவலா் என பெயா் மாற்றம் செய்ய வேண்டும். தோ்வு நிலை கிராம நிா்வாக அலுவலா்கள், சிறப்புநிலை கிராம நிா்வாக அலுவலா்களுக்கு தகுதிக்கு ஏற்ப ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியா்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கிராம நிா்வாக அலுவலா்களின் கல்வித் தகுதியை பட்டப்படிப்பாக மாற்றியமைக்க வேண்டும். பதவி உயா்வில் 30 சதவீதம் என்பதிலிருந்து 50 சதவீதமாக மாற்றம் செய்ய வேண்டும். கால வரம்பை 6 ஆண்டுகளிலிருந்து 3 ஆண்டுகளாக மாற்ற வேண்டும். டிஎஸ்எல்ஆா் பட்டா மாறுதலில் வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.