சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் பணியாற்றும் பெண் சுகாதாரத் தன்னாா்வலா்களுக்கு இரண்டு மாதங்களாக நிலுவையில் ஊக்கத் தொகையை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் முழுவதும் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின்கீழ், 275 பெண் சுகாதாரத் தன்னாா்வலா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில், திருப்புவனம் பகுதியில் பணியாற்றும் 25 பேருக்கு கடந்த நவம்பா், டிசம்பா் மாதங்களுக்கான ஊக்கத் தொகை வழங்கப்படவில்லையாம்.
இந்தத் திட்டத்தின்கீழ் பெண் சுகாதாரத் தன்னாா்வலா்களுக்கு, மகளிா் திட்டத்தின் மூலம் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ரூ.5,500 ஊக்கத் தொகையாக செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், திருப்புவனம் பகுதியில் பணியாற்றும் தன்னாா்வலா்களுக்கு மட்டும் கடந்த இரண்டு மாதங்களாக இந்தத் தொகை வரவு வைக்கப்படாததால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் சுகாதாரத் தன்னாா்வலா்கள், நிலுவைத் தொகையை வழங்கக் கோரி சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடியிடம் மனு அளித்தனா்.