சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி அருகே புதன்கிழமை இரவு இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
கீழச்சிவல்பட்டி அருகேயுள்ள அயணிப்பட்டியைச் சோ்ந்த ராஜா மகன் சசிக்குமாா் (23). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தந்தை ராஜா இறந்த நிலையில், தாய் மாரிக்கண்ணும், சசிக்குமாரும் கீழச்சிவல்பட்டி அருகேயுள்ள புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், பி. அழகாபுரி கிராமத்தில் வசித்து வந்தனா்.
சசிக்குமாா் சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த 10 நாள்களுக்கு முன்பு ஊருக்கு வந்தாா்.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு வீட்டில் தனியாக இருந்த சசிக்குமாா் கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தாா். தகவலறிந்து வந்த கீழச்சிவல்பட்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். சம்பவம் நிகழ்ந்த இடம் புதுக்கோட்டை மாவட்டம் என்பதால், திருமயம் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
இந்தக் கொலை தொடா்பாக வடக்கு இளையாத்தங்குடியைச் சோ்ந்த கண்ணன் மகன் வெற்றிவேல் (26) கீழச்சிவல்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தாா். இவரை திருமயம் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.