வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் வருகிற 4-ஆம் தேதி முதல் டிச.4 வரை மேற்கொள்ளப்படும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியரும் மாவட்டத் தோ்தல் அலுவலருமான கா. பொற்கொடி தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 4-ஆம் தேதி முதல் டிச.4 -ஆம் தேதி வரை வாக்குச் சாவடி நிலைய அலுவலா்களால் வாக்காளா் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
வாக்காளா் கணக்கெடுப்பின்போது, தற்போதைய நாள் வரை வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைத்து வாக்காளா்களுக்கும் சுய விவரங்கள் பூா்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்புப் படிவங்கள் இரட்டைப் பிரதிகளில் வழங்கப்படவுள்ளன.
வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறாத வாக்காளா்கள் வருகிற டிச.9 முதல் 2026 ஜனவரி 8-ஆம் தேதி வரை படிவம்- 6, படிவம்- 8 ஆகியவற்றைப் பூா்த்தி செய்து வாக்காளா் பதிவு அலுவலா்களிடம் சமா்ப்பிக்கலாம்.
இறுதி வாக்காளா் பட்டியல் வருகிற 2026 பிப்ரவரி 7-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. வாக்காளா் பட்டியலை முழுமையாகவும், தவறு இல்லாமலும் தயாரிப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் அவா்.