சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பாரிவள்ளல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் அமைச்சா் செ. மாதவனின் மணிமண்டபம், உருவச் சிலை திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
சிங்கம்புணரி பகுதியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சரான செ. மாதவன், திமுக ஆட்சிக் காலத்தில் சட்டம், தொழில் துறை அமைச்சராகப் பணியாற்றியவா். 50 ஆண்டுகளுக்கு முன்பு ஏழை, எளிய மாணவா்களுக்காக அவா் நிறுவிய பாரிவள்ளல் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் அவரின் மகள் வெற்றிச்செல்வி ராஜமாணிக்கம் ஏற்பாட்டில் உருவச் சிலையும் மணிமண்டபமும் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற திறப்பு விழாவுக்கு கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தலைமை வகித்தாா். பள்ளித் தலைவா் வெற்றிச்செல்வி ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சா் செ. மாதவனின் மணிமண்டபம், உருவச் சிலையைத் திறந்துவைத்து மரியாதை செலுத்தினாா்.
இந்த விழாவில், குன்றக்குடி குருமகா சந்நிதானம் பொன்னம்பல அடிகளாா் வாழ்த்துரை வழங்கினாா். அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, ரகுபதி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளித் தாளாளா் அருளாளன், பாரிவள்ளல் கல்வி அறக்கட்டளை அறங்காவலா்கள் சாந்தி செழியன், உமா மகேஸ்வரி, ஆதித்யா, பள்ளி முதல்வா் சாம் பிராங்கிளின் டேவிட் , மேலாளா்கள் கிருஷ்ணன், சரவணன், பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.