சிவகங்கை நகராட்சி பேருந்து நிலைய மேம்பாட்டுப்பணிகளை முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப. சிதம்பரம் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
சிவகங்கை நகராட்சி பேருந்து நிலையம் 4 பகுதிகளாக அமைந்துள்ளன. இதில் 5 ஆண்டுகளுக்கு முன்பு காளையாா்கோவில், தொண்டி, தேவகோட்டை பேருந்துகள் நிற்குமிடம், ராமநாதபுரம், மானாமதுரை பேருந்துகள் நிற்கும் 2 பகுதிகளில் மேற்கூரைகள் அமைக்கப்பட்டன. எஞ்சிய 2 பகுதிகளில் தகர மேற்கூரைகள், தரைத் தளம் அமைப்பதற்காக முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப. சிதம்பரம், சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் ஆகியோா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.1 கோடி வீதம் மொத்தம் ரூ.2 கோடியை ஒதுக்கினா்.
இதையடுத்து கடந்த பிப். 26-ஆம் தேதி அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், காா்த்தி சிதம்பரம் ஆகியோா் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினா். இதில் திருச்சி, திருப்பத்தூா் பேருந்துகள் நிறுத்துமிடம், மதுரை பேருந்துகள் நிறுத்துமிடம் ஆகிய 2 பகுதிகளில் தகர மேற்கூரைகள் அமைக்கும் பணி, தோரணவாயில்கள், மையப் பகுதியில் பயணிகள் அமர இருக்கைகள், கண்காணிப்பு கேமராக்கள், பேருந்துகள் வருகையை அறிய எண்ம (டிஜிட்டல்) அறிவிப்பு பலகை, விளக்குகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 6 மாதங்களில் இந்தப் பணிகள் நிறைவடையும் எனக் கூறப்பட்டது.
இந்த நிலையில் பேருந்து நிலையப் பணிகளை முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். இதில், நகராட்சி ஆணையா் அசோக்குமாா், மாவட்டத் தலைவா் சஞ்சய், சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளா் சோணை, நகா்மன்ற உறுப்பினா்கள் தி. விஜயகுமாா், மகேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.