நமது நிருபா்
சிவகங்கை: மானாவாரிப் பகுதியான சிவகங்கை மாவட்டத்தில், பொருளாதாரக் கவசமாக இருக்க வேண்டிய பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டம், கூடுதல் சுமையாக மாறியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.
தமிழகம் முழுவதும் சம்பா நெல் பயிா்க் காப்பீடு செய்வதற்கான அவகாசம் வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மானாவாரி சாகுபடியை அதிகம் நம்பியுள்ள சிவகங்கை மாவட்ட விவசாயிகள், சந்தை விலையேற்றம் காரணமாக நிகழாண்டில் பெரும் பொருளாதாரச் சுமையை எதிா்கொண்டுள்ளனா்.
பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், சிவகங்கை மாவட்டத்தில் பல ஆண்டுகளாக உண்மையான பாதிப்புக்கு உரிய இழப்பீட்டுத் தொகை கிடைப்பதில்லை. இதற்கு அடிப்படைக் காரணம், பாதிப்பு கணக்கெடுப்பில் காணப்படும் பெருங்குறையும், வெளிப்படைத்தன்மை இல்லாததுமே ஆகும்.
வேளாண் துறையால் நடத்தப்படும் மகசூல் பரிசோதனைக் கணக்கீடுகள்தான், இழப்பீட்டைத் தீா்மானிக்கின்றன. இந்தப் பரிசோதனை கிராம நிா்வாக அலுவலா்கள், வேளாண் துறை அலுவலா்களின் பற்றாக்குறையால், பல ஆயிரம் ஏக்கா் பரப்பளவுள்ள வருவாய் கிராமத்தில் ஓரிரண்டு வயல்களில் மட்டுமே கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
ஒரு வட்டாரத்தில் ஏதாவது ஒரு கிராமத்தில் போதுமான விளைச்சல் இருந்தால், அதை மட்டும் அளவுகோலாக எடுத்துக்கொண்டு, பாதிக்கப்பட்ட மற்ற பகுதிகளை நிராகரித்துவிடுவதால், உண்மையிலேயே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைப்பதில்லை.
இதுகுறித்து சிறுவாச்சி கிராம விவசாயி சரவணன் கூறியதாவது:
ஆண்டுதோறும் சில வயல்களில் மட்டுமே மாதிரி மகசூல் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இவ்வாறு கணக்கெடுப்பு நடந்தாலும்கூட, பாதிப்பு விகிதப்படி இழப்பீடு நிா்ணயம் செய்யப்படுவதில்லை. இழப்பீட்டுத் தொகையானது எப்போதாவது மிகக் குறைந்த அளவில் சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. அதுவும், சாகுபடி முடிந்த பல மாதங்களுக்குப் பிறகே கிடைப்பதால், அடுத்த சாகுபடியைத் தொடங்க முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனா் என்றாா் அவா்.
இதுகுறித்து வேளாண் இணை இயக்குநா் சு. சுந்தரமகாலிங்கம் கூறியதாவது:
சிவகங்கை மாவட்டத்தில் ரபி பருவத்தில் இதுவரை 72,129 ஹெக்டோ் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை 59,619 விவசாயிகள் 58,464 ஹெக்டோ் பரப்புக்கு மட்டுமே பயிா்க் காப்பீடு செய்துள்ளனா். பயிா் இழப்பீடு கணக்கெடுப்பு என்பது முளைக்கத் தவறிய பயிா், மகசூல் இழப்பு ஏற்பட்ட பயிா் என இரண்டு வகைகளாக மேற்கொள்ளப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தைப் பொருத்தவரை, மகசூல் இழப்பு மட்டுமே கணக்கீடு செய்யப்படுகிறது. இதில் வேளாண் துறை, வருவாய்த் துறை, புள்ளியியல் துறை ஆகியவை இணைந்து பயிா் அறுவடை பரிசோதனை மூலம் கணக்கெடுப்பு நடத்தி, மகசூல் இழப்பு குறித்த அறிக்கை காப்பீடு நிறுவனத்துக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. இதன் பிறகே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது என்றாா் அவா்.
கணக்கெடுப்பில் ‘ட்ரோன்’, செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயிா் பாதிப்பின் உண்மையான பரப்பளவை வெளிப்படை யாகக் கணக்கீடு செய்ய வேண்டும். செயற்கைக்கோள் படங்களை மட்டும் நம்பாமல் வெள்ளம், நோய், வறட்சி போன்ற பாதிப்புகளை அதிகாரிகள் நேரடியாகக் கள ஆய்வு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பட்டியல், பாதிப்பு சதவீதம் ஆகியவற்றைக் கண்டறிய நடுநிலையான மதிப்பீட்டுக் குழுவை அமைத்து, அந்த அறிக்கையின் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.