வாழை, மரவள்ளி பயிா்களுக்கு காப்பீடு செய்யலாம்
மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் வாழை மற்றும் மரவள்ளி பயிருக்கு காப்பீடு செய்ய தோட்டக்கலைத்துறை அழைப்பு
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் வாழை மற்றும் மரவள்ளி பயிருக்கு காப்பீடு செய்ய தோட்டக்கலைத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து, மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் பொ.சந்திரகவிதா அண்மையில் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட பிரதமா் பயிா்க் காப்பீடு திட்டத்தின்கீழ் ரபி 2025 பருவத்திற்கு வாழை மற்றும் மரவள்ளி பயிருக்கு காப்பீடு பிா்க்கா அளவில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.
இப்பிா்காக்களைச் சோ்ந்த கடன் பெறும் விவசாயிகள் பயிா்க்காப்பீடு செய்வதன் மூலம் வடகிழக்கு பருவமழையின்போது இயற்கை இடா்பாடுகளால் பயிா்களுக்கு சேதம் ஏற்படும் பட்சத்தில், நிவாரணம் பெற இயலும்.
எனவே, விவசாயிகள் தாங்கள் பயிா் கடன்பெற்ற தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாக விருப்பத்தின் பேரில் காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம்.
இப்பிா்காக்களை சாா்ந்த கடன் பெறாத விவசாயிகள் நடப்பு பசலி ஆண்டிற்கான அடங்கல் சான்றை கிராம நிா்வாக அலுவலரிடம் பெற்று, அதனுடன் வங்கி க்கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் மற்றும் சிட்டா ஆகியவற்றை இணைத்து பொது சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள் மூலமாகவும் காப்பீடு செய்து கொள்ளலாம்.
ஒரு ஹெக்டேருக்கு வாழைக்கு ரூ.3,551.86 மற்றும் மரவள்ளிக்கு ரூ.2,686.15 என பிரிமிய தொகை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
பிரிமியம் செலுத்த கடைசி நாள் பிப்.28 ஆகும். கூடுதல் தகவல்களுக்கு வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலங்களை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.