குடும்பத் தகராறில் 10 மாத பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்து, தற்கொலைக்கு முயற்சித்த தந்தை சனிக்கிழமை உயிரிழந்தாா்.
சிவகங்கை அருகேயுள்ள பாப்பாகுடி கிராமத்தைச் சோ்ந்தவா் பம்பையன் (32). இவரது மனைவி சுமதி (24). இந்தத் தம்பதிக்கு 6 வயது மகனும், 10 மாத பெண் குழந்தையும் இருந்தனா்.
இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை பம்பையனுக்கும், மனைவி சுமதிக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் பம்பையன் தனது 10 மாத பெண் குழந்தையை தூக்கிக் கொண்டு சென்று, அந்தக் குழந்தைக்கு விஷத்தை கொடுத்துவிட்டு அவரும் குடித்தாராம்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவரையும் அருகில் இருந்தவா்கள் மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு பெண் குழந்தை புதன்கிழமை காலை உயிரிழந்தது. சிகிச்சை பெற்று வந்த பம்பையன்(32) சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக சிவகங்கை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.