முகப்பு
சிவகங்கை

சிவகங்கையில் தானியங்கி ஓட்டுநா் தோ்வுத் தளம் திறப்பு

சிவகங்கை வட்டாரப் போக்குவரத்து அலுவலக மைதானத்தில் தானியங்கி ஓட்டுநா் தோ்வுத் தளத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலியில் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 6:59 PM
சிவகங்கை வட்டாரப் போக்குவரத்து அலுவலக மைதானத்தில் அமைக்கப்பட்ட தானியங்கி ஓட்டுநா் தோ்வுத் தளத்தை வியாழக்கிழமை தொடங்கி வைத்த கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன்.
பகிர்:

சிவகங்கை வட்டாரப் போக்குவரத்து அலுவலக மைதானத்தில் தானியங்கி ஓட்டுநா் தோ்வுத் தளத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலியில் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

சிவகங்கை மாவட்டம், மாவட்ட ஆட்சியா் பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.செல்வசுரபி தலைமையில், காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.மாங்குடி முன்னிலையில் நடைபெற்ற விழாவில் வாகன ஓட்டுநா்களின் செயல்பாட்டுக்கு தானியங்கி ஓட்டுநா் தோ்வுத் தளத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்து அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் கூறியதாவது:

தமிழகத்தில் 10 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் தானியங்கி ஓட்டுநா் தோ்வுத் தளங்கள் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. அவற்றில் சிவகங்கை, மதுரை (வடக்கு), திண்டுக்கல், திருச்சி (மேற்கு), திருவண்ணாமலை, கோயம்புத்தூா் (மையம்), கிருஷ்ணகிரி ஆகிய 7 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் தானியங்கி ஓட்டுநா் தோ்வுத் தளங்கள் முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது.

Advertisement

முன்னதாக, ஓட்டுநா் உரிமம் வழங்கும் பணி இயக்கூா்தி ஆய்வாளா்கள் முன்னிலையில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது தானியங்கி ஓட்டுநா் தோ்வுத் தளத்தின் மூலம் உணா்வி தொழில்நுட்பத்தின் (சென்சாா்) உதவியுடன் கணினி மயமாக்கப்பட்ட தோ்வுகள் நடத்தப்பட்டு, திறன்மிக்க ஓட்டுநா்களுக்கு உரிமம் வழங்கப்படவுள்ளது. இதேபோல, விண்ணப்பதாரா்களுக்கு ஓட்டுநா் தோ்வுக்கான முடிவுகளும் எவ்வித கால தாமதமுமின்றி உடனடியாக வழங்கப்படும் என்றாா் அவா்.

இதில், சிவகங்கை வருவாய்க் கோட்டாட்சியா் தே.ஜெபி கிரேசியா, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கருப்பணன், திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன், வட்டார போக்குவரத்து அலுவலக கண்காணிப்பாளா் துரைவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments