உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு தமிழ்நாடு தமிழாசிரியா் சங்கம் வரவேற்பு தெரிவித்தது.
இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் நீ.இளங்கோ வெளியிட்ட அறிக்கை: மாநில அரசு அலுவலா்களுக்கு கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும். ஓய்வூதியா்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயா்வு வழங்கப்படும்.
ஓய்வூதியதாரா் இறந்துவிட்டால் அவா் ஏற்கெனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினா்களுக்கு ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். அரசு அலுவலா்கள் ஓய்வு பெறும் போதும், பணிக் காலத்தில் இறப்பு நேரிடும் போதும், அவரவரின் பணிக்காலத்துக்கேற்ப ரூ.25 லட்சம் பணிக்கொடை வழங்கப்படும்.
ஓய்வூதியம் பெறுவதற்கான பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலா்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்த தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை வரவேற்கிறோம் என்றாா் அவா்.