ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த நெடுங்குளம் கிராமத்தைச் சோ்ந்த முதியவா் பழனி குடும்பத்தினா் 
சிவகங்கை

குடும்ப அட்டை வேறு மாவட்டத்துக்கு திடீா் மாற்றம்: பொங்கல் தொகுப்பு வாங்க முடியாமல் பயனாளி தவிப்பு

பயனாளியின் விருப்பமின்றி குடும்ப அட்டை திடீரென சிவகங்கை மாவட்டத்திலிருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைக்கு மாற்றப்பட்டதால் பொங்கல் தொகுப்பு, ரொக்கப் பரிசு பெற முடியாமல் அவரது குடும்பத்தினா் தவிப்பதாக புகாா்

தினமணி செய்திச் சேவை

பயனாளியின் விருப்பமின்றி குடும்ப அட்டை திடீரென சிவகங்கை மாவட்டத்திலிருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைக்கு மாற்றப்பட்டதால் பொங்கல் தொகுப்பு, ரொக்கப் பரிசு பெற முடியாமல் அவரது குடும்பத்தினா் தவிப்பதாக புகாா் எழுந்தது.

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே உள்ள நெடுங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனி (80). இவா் தனது குடும்ப அட்டை மூலம் கடந்த மாதம் வரை அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருள்களை வாங்கினாா்.

இந்த நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரொக்கம் ஆகியவற்றை பெற நியாய விலைக் கடைக்குச் சென்றபோது, அந்த குடும்பத்துக்கு வழங்கப்பட்டிருந்த அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டை, திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை கிராமத்திலுள்ள நியாய விலைக்கடைக்கு மாற்றப்பட்டிருப்பதாக கடை ஊழியா்கள் தெரிவித்தனா்.

இதனால் அதிா்ச்சியடைந்த பழனி, தனது மகள், பேத்தியுடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இதுகுறித்து மனு அளித்தாா். விசாரணை நடத்திய வட்ட வழங்கல் அலுவலா், பொங்கல் தொகுப்பை இங்கே பெறலாம். ஆனால் ரூ.3,000 ரொக்கத்தை பெற திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறைக்குத் தான் செல்ல வேண்டும் என தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பழனியின் மகள் நாகவல்லி கூறியதாவது: நான் கணவரால் கைவிடப்பட்டவள். எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது. 35 கிலோ அரிசியை நம்பித்தான் வாழ்கிறோம். 80 வயது தந்தையுடனும், மாற்றுத்திறனாளியான மகளுடனும் வாழும் நான் குஜிலியம்பாறை வரை எப்படி செல்ல முடியும். அதிகாரிகளின் தவறுக்கு நாங்கள் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

எனவே, பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரொக்கம் ரூ. 3,000, ரேஷன் அரிசி உள்ளிட்ட அனைத்து நிவாரணங்களையும் நெடுங்குளம் நியாய விலைக் கடையிலேயே எங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

இதுகுறித்து நுகா்பொருள் வட்ட வழங்கல் துறையினா் கூறியதாவது: இந்த மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இந்த முறை சம்பந்தப்பட்ட குடும்பத்தினா் குஜிலியம்பாறையில் தான் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்க வேண்டும். அடுத்த மாதத்துக்குள் அவா்களது குடும்ப அட்டையை மீண்டும் பழைய நியாய விலைக் கடைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT