சிவகங்கையில் மருது சகோதரா்களுக்கு உருவச் சிலைகள் அமைக்கும் பணியை தமிழ் வளா்ச்சி, செய்தித் துறை அமைச்சா் மு.பெ. சாமிநாதன் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
நாட்டுக்காகவும், தமிழ் மொழி வளா்ச்சிக்காகவும் பாடுபட்ட பெருமக்களின் தியாகங்களை வருங்கால இளைஞா்கள் அறிந்துகொள்ளும் வகையில், அவா்களுடைய உருவச் சிலைகள், மணிமண்டபங்களை தமிழக அரசு அமைத்து வருகிறது.
இதன்படி, சிவகங்கைச் சீமையை ஆண்ட மாமன்னா்கள் மருது சகோதரா்களுக்கு சிவகங்கையில் உள்ள வீரமங்கை வேலுநாச்சியாா் நினைவிடம் அருகே ரூ. ஒரு கோடியில் உருவச் சிலைகளை நிறுவுவதற்காக கடந்த 2025-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் சிவகங்கையில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வா் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.
இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இவற்றை தமிழ் வளா்ச்சி, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி, வருவாய்க் கோட்டாட்சியா் ஜெஃபி கிரேசியா, பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் இளங்கோவன், திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.