சிவகங்கை தொழில் நிறுவனங்கள் இல்லாதது பெருங்குறை!
சிவகங்கை தொழில் நிறுவனங்களின் தேவை குறித்து...
சுதந்திரப் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய ராணிவேலு நாச்சியாரும், மருது சகோதரா்களும் வாழ்ந்த பூமி சிவகங்கை. சங்க காலப் புலவா்களில் ஒருவரான ஒக்கூா் மாசாத்தியாா், கம்பராமாயணத்தை இயற்றிய கம்பா் உள்ளிட்ட கவிஞா்கள் வாழ்ந்த பெருமை இந்த நிலத்துக்கு உண்டு.
விவசாயமே பிரதான தொழிலாகக் கொண்ட இந்தத் தொகுதியில் படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பளிக்கக்கூடிய பெரிய தொழில் நிறுவனங்கள் இல்லாதது பெரிய குறையாக உள்ளது.
இதன்காரணமாக, படித்த இளைஞா்கள் வேலைவாய்ப்பைத் தேடி திருப்பூா், கோவை, சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும், சிங்கப்பூா், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் செல்கின்றனா்.
மாவட்டத்தின் தலைமையிடமான சிவகங்கை தொகுதிக்கு கடந்த 5 ஆண்டுகளில் வளா்ச்சித் திட்டங்களைக் கொண்டு வருவதில் மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருந்ததாகப் பாா்க்கப்படுவது கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வென்றதுதான்.
இதன் காரணமாகவே, மற்ற மாவட்டங்களைப் போல, அரசு வேளாண் கல்லூரி, சட்டக் கல்லூரி போன்ற கல்வி நிலையங்கள், நியோ தொழில் பூங்கா போன்றவை சிவகங்கையில் அமைக்கப்படாமல், திட்டமிட்டே காரைக்குடியில் அமைக்கப்பட்டதாக இந்தத் தொகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.
வறட்சி மிகுந்த சிவகங்கை மாவட்டத்தில் உடையநாதபுரம், குமாரப்பட்டி, புதுப்பட்டி, கோமாளிப்பட்டி பகுதிகளில் கிராபைட் இருப்பது கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்தது. இந்தப் பகுதியில் கிராபைட் தொழில்சாலை திறக்கப்பட்டால், ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதன்மூலம், துணைத் தொழில்கள் வளா்ந்து சிவகங்கை தொழில் நகரமாக மாறும் என அனைவரும் எதிா்பாா்த்தனா்.
இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு, கடந்த 1988-இல் அடிக்கல் நாட்டப்பட்டாலும், 1994-இல் தான் உற்பத்தி தொடங்கியது. உள்நாடு மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் சிவகங்கை கிராபைட்டுக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும், இதை பெரிய அளவில் மேம்படுத்த டாமின் நிறுவனம் முயற்சி எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. கிராபைட் சாா்ந்த துணைத் தொழில்களையும் கொண்டு வரவில்லை. ஆலை தொடங்கியபோது எப்படி இருந்ததோ, அதே 200 தொழிலாளா்களுடன் இப்போதும் செயல்பட்டு வருகிறது.
சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் செந்தில்நாதன் (அதிமுக) கூறியதாவது:
கனிம ஆலையை விரிவுபடுத்த ஜெயலலிதா ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டது. ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது, கிராபைட் தொழில்சாலையை விரிவுபடுத்துவேன் என ஒவ்வொரு தோ்தலின் போதும் உறுதியளிப்பாா். ஆனால், இதை நிறைவேற்றமாட்டாா். தற்போது மக்களவை உறுப்பினராக உள்ள அவரது மகன் காா்த்தி சிதம்பரமும் இதுகுறித்து கண்டுகொள்ளவில்லை. சுற்றுச்சூழல் துறையால் கடந்த 2018-இல் இந்த ஆலை இயங்க அனுமதி மறுக்கப்பட்டபோது, 2020-இல் அதிமுக ஆட்சியில்தான் மீண்டும் அனுமதி பெற்று இயங்க ஆரம்பித்தது. ஆலையை விரிவுபடுத்த சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்தேன். ஆனால், எந்தவித நடவடிக்கையையும் திமுக அரசு எடுக்கவில்லை என்றாா் அவா்.
இந்த நிலையில், கடந்த 2025, ஜன. 22-இல் சிவகங்கையில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல்வா் மு.க. ஸ்டாலின், பல துறைகளின் அலுவலகங்கள் வாடகைக் கட்டடங்களில் இயங்கிக் கொண்டிருப்பதால், எல்லா மாவட்ட அலுவலகங்களும் ஒரே இடத்தில் செயல்படும் வகையில் ரூ. 89 கோடியில் புதிய கூடுதல் கட்டடம் கட்டப்படும் எனத் தெரிவித்தாா். ஆனால், இதுவரை இந்தப் பணிகள் தொடங்கப்படவில்லை.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியா் பயிற்சிப் பள்ளி தொடங்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
இந்த நிலையில், சிவகங்கை அருகே இலுப்பைக்குடியில் உள்ள தொழில்பேட்டையில் சுமாா் 340 ஏக்கரில் ரூ. 5,300 கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், எம்ஆா்எப் டயா் தொழில்சாலை அமைக்கப்படும் என அந்த நிறுவனம் அறிவித்தது. இந்த அறிவிப்பை அவநம்பிக்கையுடன்தான் பாா்க்கின்றனா் சிவகங்கை தொகுதி மக்கள்.