கம்பத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்: 59 பெண்கள் உள்பட 204 பேர் கைது
கம்பத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த 59 பெண்கள் உள்பட 204 பேரை செவ்வாய்க்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
கம்பத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த 59 பெண்கள் உள்பட 204 பேரை செவ்வாய்க்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
காஷ்மீரில் சிறுமி ஆஸிபா வழக்கில் நீதி வேண்டி, எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 50 சிறுவர், சிறுமியர்களை அழைத்து கொண்டு, கம்பத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊர்வலமாக சென்றனர். கம்பம் வடக்கு போலீஸார் ஊர்வலத்தை தடுத்து நிறுத்தி, சிறுவர் சிறுமியர்களை, கட்டாயப்படுத்தி ஊர்வலம் செல்ல வைத்ததாக 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அவர்களில், இரண்டு பேரை கைது செய்தனர்.
போலீஸார் பொய்வழக்கு போடுவதாக கூறி, செவ்வாய்க்கிழமை தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்தப்போவதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் அறிவித்தனர், இதற்கு போலீஸார் அனுமதி தரவில்லை.
இந்நிலையில், திட்டமிட்டபடி ஆர்பாட்டம் நடைபெறும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் அறிவித்தனர். மாலை சுமார் 5 மணியளவில், திடீரென ஏ.கே.ஜி.திடலில் ஆண்களும், பெண்களுமாக எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஏராளமானோர் திரண்டனர். காவல்துறையை கண்டித்தும், ஆஸிபாவுக்கு நீதி வழங்கக்கோரியும், கோஷமிட்டபடி தடையை மீறி ஊர்வலமாகச் செல்ல முயன்றனர். போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி, 59 பெண்கள் உள்பட 204 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.