முகப்பு
தேனி

ஊராட்சிகளில் அரசு அறிவித்த சம்பள உயர்வை வழங்காததால் துப்புரவு பணியாளர்கள் அதிருப்தி

தேனி மாவட்டத்தில் அரசு அறிவித்தவாறு சம்பள உயர்வு வழங்காததால், ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் மேல் நிலை குடிநீர் தொட்டி ஆபரேட்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

Updated On : 15 மே, 2018 at 12:46 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

தேனி மாவட்டத்தில் அரசு அறிவித்தவாறு சம்பள உயர்வு வழங்காததால், ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் மேல் நிலை குடிநீர் தொட்டி ஆபரேட்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
மாவட்டத்துக்கு உள்பட்ட 130 ஊராட்சிகளிலும் தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதிய அடிப்படையில் 2,000 துப்புரவு பணியாளர்கள், மேல்நிலை குடிநீர் தொட்டி ஆபரேட்டர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு சம்பள உயர்வு வழங்க கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அரசு ஆணை பிறப்பித்தது.
சேலம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் மேல்நிலை குடிநீர் தொட்டி ஆபரேட்டர்களுக்கு அரசு அறிவித்த சம்பள உயர்வு மற்றும் நிலுவைத் தொகை வழங்கப்பட்டு விட்டது.
இந் நிலையில், தேனி மாவட்டத்தில் சம்பள உயர்வு மற்றும் நிலுவைத் தொகை வழங்கக்கோரி ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் குடிநீர் தொட்டி ஆபரேட்டர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் சம்பள உயர்வு மற்றும் நிலுவைத் தொகை வழங்குவதாக உறுதியளித்தனர்.
ஆனால், ஆண்டிபட்டி மற்றும் உத்தமபாளையம் ஒன்றியத்திற்கு உள்பட்ட சில ஊராட்சிகளில் மட்டும் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஏனைய ஊராட்சிகளில் துப்புரவு பணியாளர்கள் சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. இது குறித்து சி.ஐ.டி.யு.உள்ளாட்சி ஊழியர்கள் சங்க மாவட்டச் செயலர் ஜெயபாண்டி கூறியது: ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் குடிநீர் தொட்டி ஆபரேட்டர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு அவர்கள் பெற்று வந்த சம்பளத்தின் அடிப்படையில் சம்பள உயர்வு மற்றும் நிலுவைத் தொகை வழங்க வேண்டும். ஆனால், கடந்த 2011-ம் ஆண்டு பெற்று வந்த சம்பளத்தின் அடிப்படையில் தான் சம்பள உயர்வு நிர்ணயிக்கப்படும் என்ற மாறுபட்ட கருத்தை தெரிவித்து அதிகாரிகள் காலதாமதம் செய்து வருகின்றனர்.
இந்தப் பிரச்னையில் மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தலையிட்டு அரசு அறிவித்தபடி உரிய சம்பள உயர்வு மற்றும் நிலுவைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.