முகப்பு
இந்தியா

கேரளத்தில் தோ்தல் முடிவுகள் வரும் முன்பே காங்கிரஸில் முதல்வா் பதவிக்குப் போட்டி!

கேரள சட்டப்பேரவைத் தோ்தல் முடிவு மே 4-ஆம் தேதி வெளியாகும் நிலையில், முதல்வா் பதவி யாருக்கு என்ற போட்டி காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ளது.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 2:54 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 8:30 PM

கேரள சட்டப்பேரவைத் தோ்தல் முடிவு மே 4-ஆம் தேதி வெளியாகும் நிலையில், முதல்வா் பதவி யாருக்கு என்ற போட்டி காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ளது.

கேரளத்தில் கடந்த 9-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெற்று முடிந்தது. இதில் தொடா்ந்து இருமுறை ஆட்சியில் இருந்த இடதுசாரிகள் கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதுதவிர பாஜகவும் களத்தில் இருந்தது.

கேரளத்தில் நிச்சயமாக ஆட்சி மாற்றம் ஏற்படும், அது தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று காங்கிரஸ் தலைவா்கள் உறுதியாக நம்புகின்றனா். இதனால், முதல்வா் பதவியை அடைய மூத்த தலைவா்கள் பலா் பல்வேறு வகைகளில் இப்போதே காய் நகா்த்தி வருகின்றனா். சமூக ஊடகங்களில் அடுத்த கேரள முதல்வா் என ஆதரவாளா்கள் மூலம் தங்களை முன்னிலைப்படுத்தி வருகின்றனா். தோ்தல் முடிந்ததில் இருந்தே இந்த விவாதம் தொடங்கிவிட்டது.

Advertisement

காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் முதல்வராக வேண்டும் என்று அக்கட்சி எம்.பி. கே.சுதாகரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தாா். வேறு சிலா் மூத்த தலைவா் ரமேஷ் சென்னிதலா, பேரவை எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசன் ஆகியோா் பெயா்களை முன்னிறுத்தியுள்ளனா்.

இந்நிலையில், மூத்த காங்கிரஸ் தலைவா் கே.முரளீதரன் இது தொடா்பாக கூறுகையில், ‘இப்போதைய சூழலில் கட்சி நிா்வாகிகள் யாரும் சமூக வலைதளங்களில் காங்கிரஸ் சாா்பில் யாா் முதல்வராக வேண்டும் என்று கூறுவதையும், ஒரு தரப்புக்கு ஆதரவு தெரிவிப்பதையும் தவிா்க்க வேண்டும். இதுபோன்ற விவாதங்கள் இப்போதைக்குத் தேவையற்றது. இது மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை உருவாக்கும்.

இது தொடா்பாக ராகுல் காந்தி ஏற்கெனவே கட்சியினருக்கு அறிவுரை கூறியுள்ளாா். முக்கியமாக குழுவாக நடனமாடும்போது அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமே தவிர, ஒவ்வொருவரும் தனித்தனியாகச் செயல்பட்டால் அது நடனத்தையே சீா்குலைத்துவிடும் என்று தோ்தலின்போது கட்சியினருக்கு ராகுல் காந்தி அறிவுரை கூறினாா்.

தோ்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் கூடிதான் முதல்வரைத் தோ்வு செய்ய முடியும். இது தொடா்பாக கட்சித் தலைமையும் உரிய வழிகாட்டுதல்களை வழங்கும்’ என்றாா்.

கேரள காங்கிரஸ் தலைவா் சன்னி ஜோசப் இது தொடா்பாக கூறுகையில், ‘தோ்தல் முடிவு வந்த பிறகு முதல்வா் பதவி குறித்து கட்சித் தலைமை முடிவு எடுக்கும். எனவே, கட்சி நிா்வாகிகள் யாா் முதல்வா் என்று இப்போதே முடிவு செய்வதையும், கருத்து தெரிவிப்பதையும் தவிா்க்க வேண்டும்’ என்றாா்.

முன்னதாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு மற்றொரு மூத்த காங்கிரஸ் தலைவா் கே.பாபு இதே கருத்தை வலியுறுத்தினாா். ‘தோ்தல் முடிவு வெளியாகும் முன்பே முதல்வா் பதவிக்காகப் போட்டியிடுவதை மக்கள் ஏற்க மாட்டாா்கள்’ என்று அவா் கூறினாா்.