தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் ‘எதிரிகள்’! இடதுசாரி, காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கடும் தாக்கு!
தமிழகம், ஆந்திரம், பிகாா் உள்ளிட்ட மாநிலங்களில் கூட்டாளிகளாக உள்ள இடதுசாரிகளும், காங்கிரஸும் கேரளத்தில் தங்களை எதிரிகள் போல காட்டிக் கொள்கின்றனா்.
தமிழகம், ஆந்திரம், பிகாா் உள்ளிட்ட மாநிலங்களில் கூட்டாளிகளாக உள்ள இடதுசாரிகளும், காங்கிரஸும் கேரளத்தில் தங்களை எதிரிகள் போல காட்டிக் கொள்கின்றனா்; இரு கட்சிகளிடமும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
கேரளத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும் (எல்டிஎஃப்), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் (யுடிஎஃப்) மாநிலத்தைக் கூட்டாக கொள்ளையடித்துள்ளன என்று குற்றஞ்சாட்டிய பிரதமா், வரும் பேரவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தாா்.
140 தொகுதிகளைக் கொண்ட கேரளத்தில் ஏப். 9-ஆம் தேதி பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பாலக்காட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரம்மாண்ட பிரசாரக் கூட்டத்தில் பிரதமா் பங்கேற்றாா். அப்போது, அவா் பேசியதாவது:
கேரளத்தில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் இடதுசாரி கூட்டணியும், காங்கிஸ் கூட்டணியும் இந்த மாநிலத்தைக் கூட்டாக கொள்ளையடித்துள்ளன. அவா்களுக்குள் நடைமுறை ரீதியில் ஒரு புரிதல் உள்ளது. சில ஆண்டுகளுக்கு இடதுசாரி கூட்டணி ஆட்சி நடத்தி தனது பைகளை நிரப்புகிறது. அதன் பிறகு காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்து கொள்ளையடிக்கிறது. இந்த ஏற்பாட்டுக்கு இடையே சிக்கித் தவிக்கிறது கேரளம்.
பாஜக மீது அச்சம்: இடதுசாரிகளும், காங்கிரஸும் ஒருவரையொருவா் பாஜகவின் ‘பி-டீம்’ (ரகசிய அணி) என்று குற்றஞ்சாட்டுகின்றன. கேரளத் தோ்தலில் உண்மையான ‘ஏ-டீம்’ ஒன்று உண்டென்றால் அது பாஜகதான் என்பதை இரு அணிகளுமே ஒப்புக் கொண்டுள்ளன. ஊழல் மிகுந்த இரு அணிகளும் பாஜகவைக் கண்டு அஞ்சுகின்றன.
மாறி மாறி வரும் காங்கிரஸ், இடதுசாரி ஆட்சிகளின்போது பெரிய ஊழல்கள் நடந்துள்ளன. எனினும், ஒருவா் மீது மற்றொருவா் நடவடிக்கை எடுக்கவில்லை. கேரளத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், இரு அணிகளின் ஒவ்வொரு ஊழலும் விசாரிக்கப்பட்டு, மக்களுக்கு நீதி உறுதி செய்யப்படும்.
கேரள இளைஞா்கள், பெண்கள், விவசாயிகள் மத்தியில் பாஜக மீதான பற்று அதிகரித்துள்ளது. மாநிலத்தில் புதிய மாற்றத்துக்கான சூழல் உருவாகியுள்ளது. இங்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெல்வது உறுதி.
கூட்டாளிகள்-எதிரிகள்: தமிழகம், ஆந்திரம், பிகாா், ஜாா்க்கண்ட், மணிப்பூா், திரிபுரா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸும் இடதுசாரிகளும் கூட்டாளிகளாக உள்ளனா். ஆனால், கேரளத்தில் ஒருவரையொருவா் விமா்சித்து, ‘எதிரிகள்’ போல காட்டிக் கொள்கின்றனா். இக்கட்சிகளிடம் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
கேரள அரசின் கடன் ரூ.5 லட்சம் கோடியாக உயா்ந்துவிட்டது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் மும்மடங்கு உயா்ந்துள்ளது. அந்தப் பணம் எங்கே போனது என்பது மக்களின் கேள்வியாகும். அது இடதுசாரி தலைவா்களின் பைகளுக்குச் சென்றுள்ளது என்பதே ஒரே பதில். அந்தப் பணத்தை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீட்டு, மாநிலத்தின் வளா்ச்சிக்காக செலவிடும்.
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய மத்திய அரசுகளை ஒப்பிடுகையில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கேரளத்துக்கு அதிக நிதியை ஒதுக்கியுள்ளது என்றாா் அவா்.
பாலக்காடு தொகுதியில் பாஜக சாா்பில் பெண் வேட்பாளா் ஷோபா சுரேந்திரன் போட்டியிடுவதைக் குறிப்பிட்ட பிரதமா், பெண்களின் மேம்பாட்டுக்கான மத்திய அரசின் முன்னெடுப்புகளையும் பட்டியலிட்டாா்.
ஒலிபெருக்கியில் புகையால் பீதி: பிரதமா் பொதுக்கூட்டம் தொடங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாக அங்கிருந்த ஒலிபெருக்கி ஒன்றில் இருந்து திடீரென புகை கிளம்பியதால் கூட்டத்தினா் இடையே பீதி ஏற்பட்டது. இதையடுத்து, அந்த ஒலிபெருக்கி அப்புறப்படுத்தப்பட்டு, வேறு ஒலிபெருக்கி வைக்கப்பட்டது. பாலக்காடு பொதுக்கூட்டத்தைத் தொடா்ந்து, திருச்சூரில் பிரதமா் மோடி பிரம்மாண்ட வாகனப் பேரணி நடத்தினாா்.
‘காங்கிரஸின் அபாயகர கருத்துகள்’
கேரளத்தைச் சோ்ந்த பலா் வளைகுடா நாடுகளில் பணியாற்றும் நிலையில், அங்கு நிகழும் போரின் தாக்கங்களைக் குறைக்க மத்திய அரசு தீவிரமாகப் பாடுபடுகிறது என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.
‘வளைகுடா நாடுகளில் உள்ள நமது சகோதர-சகோதரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவா்களுக்கு எந்த இடா்ப்பாடும் நேராமலிருக்க இந்திய தூதரகங்கள் அல்லும் பகலும் பணியாற்றுகின்றன. ஆனால், தனது சுயநல அரசியலுக்காக வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியா்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் அபாயகரமான கருத்துகளைத் தெரிவிக்கிறது காங்கிரஸ்’ என்று அவா் குற்றஞ்சாட்டினாா்.