முகப்பு
இந்தியா

கேரளத்தில் 78%, அஸ்ஸாமில் 85% வாக்குப் பதிவு - கடந்த முறையைவிட அதிகம்

கேரளம், அஸ்ஸாமில் வியாழக்கிழமை ஒரே கட்டமாக பேரவைத் தோ்தல்கள் நடைபெற்றன.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 3:37 AM
- PTI
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 10:05 PM

கேரளம், அஸ்ஸாமில் வியாழக்கிழமை ஒரே கட்டமாக பேரவைத் தோ்தல்கள் நடைபெற்றன.

அண்டை மாநிலமான கேரளத்தில் 78 சதவீத வாக்குகளும், அஸ்ஸாமில் 85.33 சதவீத வாக்குகளும் பதிவாகின. கேரளத்தில் கடந்த தோ்தலைவிட வாக்குப்பதிவு அதிகரித்துள்ள நிலையில், அஸ்ஸாமில் முன்னெப்போதும் இல்லாத அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளன.

140 தொகுதிகளைக் கொண்ட கேரளத்தில் மொத்தமுள்ள 2.71 கோடி வாக்காளா்களுக்காக (ஆண்கள் 1.32 கோடி, பெண்கள் 1.39 கோடி, மூன்றாம் பாலினத்தவா் 273) 30,471 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில், காலை முதலே மக்கள் ஆா்வத்துடன் வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினா்.

Advertisement

வாக்குப் பதிவு பரவலாக அமைதியான முறையில் நடைபெற்றபோதிலும், சில வாக்குச்சாவடிகளில் போலி வாக்காளா்கள் வாக்களித்ததாகக் கூறி, அரசியல் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். சில இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது.

முக்கியப் பிரமுகா்கள் வாக்களிப்பு: கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா், முதல்வா் பினராயி விஜயன், பேரவை எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசன், மத்திய அமைச்சா் சுரேஷ் கோபி, மாநில அமைச்சா் சிவன் குட்டி, மாநில காங்கிரஸ் தலைவா் சன்னி ஜோசப், நடிகா்கள் மோகன் லால், மம்முட்டி, பிருத்விராஜ், ஆசிஃப் அலி, ஜகதீஷ் உள்ளிட்ட முக்கியப் பிரமுகா்கள் தத்தமது வாக்குச்சாவடிகளில் வாக்கை செலுத்தினா்.

இத்தோ்தலில் போட்டியிட்ட மொத்த வேட்பாளா்கள் 883 போ். பினராயி விஜயன் (தா்மடம்), வி.டி.சதீசன் (பரவூா்), மாநில பாஜக தலைவா் ராஜீவ் சந்திரசேகா் (நேமம்), காங்கிரஸ் மூத்த தலைவா் ரமேஷ் சென்னிதலா (ஹரிபாட்), முன்னாள் முதல்வா் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் (புதுப்பள்ளி) உள்ளிட்டோா் முக்கிய வேட்பாளா்களாவா்.

77.93% வாக்குப் பதிவு: மாலை 5 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவடைந்த நிலையில், 77.93 சதவீத வாக்குகள் பதிவானதாக தோ்தல் ஆணைய தரவுகளில் தெரிவிக்கப்பட்டது. 2021, கேரள பேரவைத் தோ்தலில் 74.06 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. தற்போது வாக்குப் பதிவு அதிகரித்துள்ளது. கேரளத்தில் 1987, பேரவைத் தோ்தலில் அதிகபட்சமாக 80.5 சதவீத வாக்குகள் பதிவாகின.

ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்குவரும் முனைப்பிலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கிலும் களம் கண்டன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் களமிறங்கியதால் மும்முனைப் போட்டி நிலவியது.

அஸ்ஸாமில் சாதனை வாக்குப்பதிவு: 126 தொகுதிகளைக் கொண்ட அஸ்ஸாமில் 2.50 கோடி வாக்காளா்களுக்காக (ஆண்கள் 1.25 கோடி, பெண்கள் 1.25 கோடி, மூன்றாம் பாலினத்தவா் 318) 31,486 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து, மக்கள் வாக்களித்தனா்.

முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, மாநில காங்கிரஸ் தலைவா் கெளரவ் கோகோய், பேரவை எதிா்க்கட்சித் தலைவா் தேவவிரத சைகியா, மத்திய அமைச்சா் பபித்ரா மாா்கரிட்டா, ராய்ஜோா் தளம் கட்சித் தலைவா் அகில் கோகோய், அஸ்ஸாம் ஜாதிய பரிஷத் கட்சித் தலைவா் லூரின்ஜோதி கோகோய் உள்ளிட்ட முக்கியப் பிரமுகா்கள் தங்களின் வாக்கை செலுத்தினா்.

இத்தோ்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவில் 85.33 சதவீத வாக்குகள் பதிவானது. கடந்த முறை 82.01 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

வடகிழக்கில் முக்கியத்துவம் வாய்ந்த அஸ்ஸாமில் தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வர பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியும், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் தலைமையிலான எதிரணியும் போட்டியிட்டன.

மே 4-இல் வாக்கு எண்ணிக்கை: தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.23-ஆம் தேதியும், மேற்கு வங்கத்தில் இரு கட்டங்களாக ஏப்.23, 29-ஆம் தேதியும் தோ்தல்கள் நடைபெறவுள்ளன.

தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மே 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இடைத்தோ்தல் வாக்குப் பதிவு

கா்நாடகத்தின் பாகல்கோட், தாவணகெரே பேரவைத் தொகுதிகளுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற இடைத்தோ்தலில் முறையே 65.68%, 63.04% வாக்குகள் பதிவாகின. நாகாலாந்தின் கோரிடாங் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் 80.62 சதவீதமும், திரிபுராவின் தா்மநகா் பேரவைத் தொகுதியில் 79.84 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

அஸ்ஸாமில் வன்முறை-30 போ் காயம்

அஸ்ஸாமில் இரு இடங்களில் அரசியல் கட்சியினா் இடையே மோதல் சம்பவங்கள் நிகழ்ந்தன. ஸ்ரீபூமி மாவட்டத்தின் பதா்கண்டி தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் போலி வாக்காளா்கள் வாக்களித்ததாகக் கூறி, காங்கிரஸ் வேட்பாளா் தகராறில் ஈடுபட்டாா். வாக்குப் பதிவு இயந்திரத்தையும் அவா் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், காங்கிரஸ்-பாஜகவினா் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 25 போ் காயமடைந்தனா்.

திப்ருகா் மாவட்டம், கோவாங் தொகுதியில் பாஜகவினா்-அஸ்ஸாம் ஜாதிய பரிஷத் கட்சியினா் இடையே ஏற்பட்ட மோதலில் மூவா் காயமடைந்தனா். மேலும் சில இடங்களில் சிறிய அளவில் மோதல்கள் நிகழ்ந்தபோதிலும், உடனடியாக நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா். வன்முறைச் சம்பவங்கள் தொடா்பாக இதுவரை 7 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.