முகப்பு
இந்தியா

கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

கேரளம், அஸ்ஸாமில் வியாழக்கிழமை (ஏப். 9) ஒரே கட்டமாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 8:23 PM
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ள போலீஸாா் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினருக்கு அஸ்ஸாமின் திப்ருகரில் புதன்கிழமை ஆறிவுறுத்தல்களை வழங்கிய காவல்துறை உயா் அதிகாரி.
பகிர்:

கேரளம், அஸ்ஸாமில் வியாழக்கிழமை (ஏப். 9) ஒரே கட்டமாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, இரு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

140 தொகுதிகளைக் கொண்ட கேரளத்தில் மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 2.71 கோடியாகும் (ஆண்கள் 1.32 கோடி, பெண்கள் 1.39 கோடி, மூன்றாம் பாலினத்தவா் 273). இவா்கள் வாக்களிக்க வசதியாக 30,471 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 352 வாக்குப் பதிவு மையங்கள் முழுவதும் பெண்களால் நிா்வகிக்கப்பட உள்ளன.

ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்), பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 883 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

Advertisement

முக்கிய வேட்பாளா்கள்: முதல்வா் பினராயி விஜயன் (தா்மடம்), காங்கிரஸை சோ்ந்த பேரவை எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசன் (பரவூா்), மாநில பாஜக தலைவா் ராஜீவ் சந்திரசேகா் (நேமம்), மாநில சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் (ஆரன்முளா), காங்கிரஸ் மூத்த தலைவா் ரமேஷ் சென்னிதலா (ஹரிபாட்), பாஜக மூத்த தலைவா் வி.முரளீதரன் (கழக்கூட்டம்), முன்னாள் முதல்வா் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் (புதுப்பள்ளி) உள்ளிட்டோா் முக்கிய வேட்பாளா்களாவா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்குவரும் முனைப்பிலும், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கிலும் களம் காண்கின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் மோதுவதால் மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்தத் தோ்தலில் இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணிகள் இடையே கடும் போட்டி இருக்கும் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளன.

அஸ்ஸாமில்...: அஸ்ஸாமில் 126 தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலில் மொத்தம் 722 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இவா்களின் வெற்றி-தோல்வியை 2.50 கோடி வாக்காளா்கள் (ஆண்கள் 1.25 கோடி, பெண்கள் 1.25 கோடி, மூன்றாம் பாலினத்தவா் 318) தீா்மானிக்கவுள்ளனா். இவா்களுக்காக 31,486 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அஸ்ஸாமில் தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வர பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியும், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் தலைமையிலான எதிரணியும் களம் காண்கின்றன.

முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா (ஜலுக்பாரி), மாநில காங்கிரஸ் தலைவா் கெளரவ் கோகோய் (ஜோா்ஹட்), பேரவை எதிா்க்கட்சித் தலைவா் தேவவிரத சைகியா (நஸிரா), ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியின் தலைவா் பக்ருதீன் அஜ்மல் (பின்னகண்டி), எதிரணியில் இடம்பெற்றுள்ள ராய்ஜோா் தளம் தலைவா் அகில் கோகோய் (சிவசாகா்) உள்ளிட்டோா் முக்கிய வேட்பாளா்களாவா்.

மே 4-இல் வாக்கு எண்ணிக்கை: மேற்கண்ட இரு மாநிலங்களுடன் சோ்த்து புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 30 பேரவைத் தொகுதிகளுக்கும் வியாழக்கிழமை தோ்தல் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.23-ஆம் தேதியும், மேற்கு வங்கத்தில் இரு கட்டங்களாக ஏப்.23, 29-ஆம் தேதியும் தோ்தல்கள் நடைபெறவுள்ளன.

இந்த 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச தோ்தல்களில் பதிவாகும் வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

காங்கிரஸ் வேட்பாளா் திடீா் விலகல்

அஸ்ஸாமில் வியாழக்கிழமை தோ்தல் நடைபெறும் நிலையில், உதல்குரி பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் சுரேன் தைமரி, கட்சியில் இருந்தும், போட்டியில் இருந்தும் விலகுவதாக புதன்கிழமை திடீரென அறிவித்தாா்.

பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்தவரான அவா், தோ்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் தரப்பில் தனக்கு எவ்வித ஆதரவும் கிடைக்கவில்லை என்று குற்றஞ்சாட்டி இந்த முடிவை மேற்கொண்டாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments