தேனி

போடி பரமசிவன் கோயிலுக்கு தார்ச்சாலை அமைக்கக் கோரிக்கை

DIN

போடி பரமசிவன் கோயிலுக்குச் செல்லும் மண் சாலையில் சிறு பாலம் அமைத்து தார்ச்சாலையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
போடி நகரின் மேற்கே பிரசித்தி பெற்ற பரமசிவன் மலைக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சித்திரை மாதம் 2 ஆம் தேதி தொடங்கி 8 நாள்கள் திருவிழா நடைபெறும். மேலும் இக்கோயிலில் மாதம் தோறும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் உள்ளிட்ட சிவபெருமானுக்குரிய விஷேச நாள்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
இதனால் போடி நகர் மற்றும் பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் இக்கோயிலுக்கு வந்து செல்வர்.
இதேபோல் பரமசிவன் கோயில் பகுதியிலேயே ராஜ ராஜேஸ்வரி திருக்கோயில், சத்திய சாய் பாபா திருக்கோயில், தேவர் காலனி, கரட்டுப்பட்டி கிராமம் ஆகிய பகுதிகளில் குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு செல்வதற்கும், இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்வதற்கும் சுப்புராஜ் நகரிலிருந்து பரமசிவன் கோயில் செல்லும் சாலை பயன்படுத்தப்பட்டு வருகிறது. பரமசிவன் மலைக்கோயில் அருகில்தான் போடி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இதற்காக பணியாளர்கள் செல்வதற்கும் இந்த சாலையைதான் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் போடி நகராட்சி எல்லைப் பகுதியான சுப்புராஜ் நகர் புதுக்காலனி வரை தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
அதற்கடுத்த பகுதி போடி அணைக்கரைப்பட்டி ஊராட்சியின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது. இந்த சாலை ஆரம்ப காலத்தில் நகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்வதற்காக நகராட்சியினால் தார்ச்சாலை அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. நாளடைவில் சாலையை பராமரிக்க அணைக்கரைப்பட்டி ஊராட்சி நிர்வாகம் முன் வராததோடு மழை வெள்ளத்தால் சாலை முழுவதும் சேதமடைந்து தற்போது மண் சாலையாகவே சில ஆண்டுகளாக உள்ளது.
மேலும் நகராட்சி எல்லை முடியும் சுப்புராஜ் நகர் புதுக்காலனி மற்றும் சாய்பாபா திருக்கோயில் அருகே மழை நீரோடைகள் செல்கின்றன. மழைக்காலங்களில் இந்த ஓடைகளில் தண்ணீர் அதிகமாக செல்லும். இதனால் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.
தற்போது இப்பகுதியை சேர்ந்தவர்கள் போடி-மூணாறு நெடுஞ்சாலையில் சென்று ஏல விவசாயிகள் சங்க கல்லூரி அருகே செல்லும் தார்ச்சாலையை பயன்படுத்தி பரமசிவன் மலைக்கோவில் பகுதியை அடைகின்றனர். இதனால் நேர விரயமும், பண விரயமும் ஏற்படுகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து போடி சுப்புராஜ் நகர் பகுதியிலிருந்து பரமசிவன் மலைக்கோயில் செல்லும் மண் சாலையில் சிறு பாலங்கள் அமைத்து தார்ச்சாலையாக மாற்றியமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT