தேனி

மழை இல்லாததால் வறண்டது வைகை ஆறு கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு

DIN

வருசநாடு பகுதியில் போதிய மழை இல்லாத  தால், மூலவைகை ஆறு கடந்த 8 மாதங்களாக வறண்டு காணப்படுகிறது. இதனால், சுற்றுவட்டாரக் கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா வருசநாடு அருகே வெள்ளிமலை வனப் பகுதியில் மூலவைகை ஆறு உற்பத்தியாகிறது. இது, கடமலை-மயிலை ஒன்றியம் வழியாக ஓடி வைகை அணையில் கலக்கிறது. கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள 150 கிராமங்களுக்கும் முக்கிய நீர் ஆதாரமாக வைகை ஆறு விளங்குகிறது.  
கடமலைக்குண்டு, வருசநாடு, மயிலாடும்பாறை உள்ளிட்ட கிராமங்களில் வைகை ஆற்றில் உறை கிணறு அமைத்து, கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் பெரும்பாலான கிராமங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஓராண்டாக கடமலை-மயிலை ஒன்றியத்தில் போதிய அளவில் மழை பெய்யவில்லை. இதன் காரணமாக, வைகை ஆறு கடந்த 10 மாதங்களாக வற்றிய நிலையில் உள்ளது. 
வைகை ஆறு வற்றினாலும், உறை கிணறுகளில் உள்ள நீரை வைத்து கிராமங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது உறை கிணறுகளில் உள்ள நீரின் மட்டமும் வெகுவாகக் குறைந்துள்ளது. கடமலைக்குண்டு, கண்டமனூர் உள்ளிட்ட கிராமங்களில் உறை கிணறுகளில் நீர் மட்டம் முற்றிலுமாக வற்றியது. இதனால், இப்பகுதியில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. 
பொதுமக்கள் பக்கத்து கிராமங்களுக்குச் சென்று குடிநீர் பிடித்து வரும் நிலை உள்ளது. கடமலை-மயிலை ஒன்றியத்தில் இந்த அளவுக்கு குடிநீர் தட்டுப்பாடு எப்போதும் ஏற்பட்டதில்லை என்றும், அதேபோல் கடந்த 40 ஆண்டுகளில் 10 மாதங்களுக்கு மேல் வைகை ஆறு வறண்ட நிலையில் காணப்பட்டதில்லை என்றும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 
இதற்கு காரணம், கடந்த ஆண்டு பொய்த்த வடகிழக்குப் பருவமழை மற்றும் 2 மாதங்களுக்கு முன் பெய்யவேண்டிய தென்மேற்குப் பருவமழை இதுவரை பெய்யாததே காரணம் எனக் கூறப்படுகிறது. 
எனவே, வெள்ளிமலை வனப் பகுதியில் அதிக அளவில் மழை பெய்து, வைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்பட வேண்டும் என்பதே, ஒட்டுமொத்த பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

SCROLL FOR NEXT