தேனி மாவட்டத்தில் காற்றாலை மின் உற்பத்தி மையங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் சொத்து வரி செலுத்தாததால், ஊராட்சிகளுக்கு ஆண்டொன்றுக்கு சுமார் ரூ.12 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
தேனி மாவட்டத்தில் பருவநிலை மாற்றத்தால் மழையின்றி மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் மானாவரி விவசாயம் நலிவடைந்து வருகிறது. விவசாய வருமானம் குறைந்ததால் மானாவாரி நிலங்களை காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய விவசாயிகள் முன் வந்தனர். இதனால், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில், கடந்த 10 ஆண்டுகளில் 585 இடங்களில் காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. இதில் தற்போது 464 காற்றாலைகள் முழுமையான இயக்க நிலையில் உள்ளன. இவற்றின் மூலம் தினமும் 262 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு சொத்து வரி விதிப்பு செய்ய உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. காற்றாலை நிறுவனங்கள் அனைத்தும் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் அமைந்துள்ளதால், ஊராட்சி நிர்வாகம் சார்பில் காற்றாலை மின் உற்பத்தி மையங்களுக்கு அதன் மொத்த சொத்து மதிப்பின் அடிப்படையில், ஆண்டொன்றுக்கு தலா ரூ.2 முதல் 2.50 லட்சம் வரி சொத்து வரி விதிப்பு செய்யப்பட்டது.
வரி விதிப்பில் சர்ச்சை: ஊராட்சிப் பகுதிகளில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள், திரையரங்குகள் நலிவடைந்துள்ளதால் அவற்றின் மூலம் ஊராட்சிகளுக்கு கிடைக்க வேண்டிய சொத்து வரி குறைந்து வருகிறது. இந்த நிலையில், காற்றாலை மின் உற்பத்தி மையங்களின் சொத்து வரி மூலம் ஊராட்சிகளுக்கு போதிய வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரி விதிப்பிற்காக காற்றாலை சொத்துக்களை மதிப்பீடு செய்ததில் சர்ச்சை ஏற்பட்டது.
காற்றாலை அமைந்துள்ள நிலப் பரப்பின் சொத்து மதிப்பின் அடிப்படையிலேயே வரி விதிப்பு செய்ய வேண்டும் என்று காற்றாலை நிறுவனங்கள் சார்பிலும், காற்றாலை மின் உற்பத்தி மையத்தின் நிலம், தளவாடங்கள் போன்ற மொத்த சொத்து மதிப்பின் அடிப்படையிலேயே சொத்து வரி விதிப்பு செய்யப்படும்
என்று ஊராட்சி நிர்வாகமும் தெரிவித்து வந்தனர்.
இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படாமல் தேனி மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்கள் மூலம் ஊராட்சிகளுக்கு ஆண்டுக்கு ரூ.12 கோடி வீதம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் கூறியது:
ஊராட்சிகளில் நிதிப் பற்றாக்குறையால் மின் வாரியம் மற்றும் குடிநீர் வாரியத்திற்கு கட்டணம் செலுத்த முடியாமலும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியாமலும் அலுவலர்கள் தவித்து வருகின்றனர்.
அரசு கட்டமைப்பு வசதிகளை முழுமையாக மேற்கொள்ளும் காற்றாலை மையங்கள், அதன் மொத்த சொத்து மதிப்பின் அடிப்படையிலேயே வரி செலுத்த வேண்டும். இப்பிரச்னை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கினை விரைந்து முடித்து ஊராட்சி நிர்வாகத்திற்கு வருவாய் வாய்ப்பை ஏற்படுத்தித் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.