கூடலூர் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்ற அதிகாரிகளிடம் பெண்கள் வாக்குவாதம்
கூடலூர் அருகே வெள்ளிக்கிழமை ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற சென்ற வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்ட பெண்கள், ஆண்கள் என 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
கூடலூர் அருகே வெள்ளிக்கிழமை ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற சென்ற வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்ட பெண்கள், ஆண்கள் என 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேனி மாவட்டம், கூடலூர் குமுளி நெடுஞ்சாலையில் உள்ளது தம்மணம்பட்டி, இங்கு அரசுப் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து சுமார் 36 பேர்கள் வீடுகள் கட்டி குடியிருந்தனர். கடந்த 2018 ஆம் ஆண்டு வருவாய்த்துறையினர் கலந்து பேசி ஆக்கிரமிப்பாளர்கள் இடத்துக்கு மாற்று இடம் தருவதாக கூறி வீடுகளை அகற்றுமாறு கேட்டுக்கொண்டனர்.36 பேர்களுக்கும் குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள் வழங்க வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுத்தனர். அதன்பின்பு மேலும் 22 நபர்கள் அதே இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் தகர செட்டுகள் போட்டு குடியிருந்து வந்தனர்.
அவர்களிடமும் பேசிய வருவாய்த்தறையினர் கூடுதலாக 22 வீடுகள் தருவதாக கூறி ஒதுக்கீடு செய்தனர். மேலும் இந்த இடங்களை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தினர். தற்காலிக குடிசை அமைக்க ரூபாய் 12,000 வழங்கினர். தம்மணம்பட்டி குடியிருப்பு ஆக்கிரமிப்பாளர்களை மாற்று இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தி தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக நோட்டீஸ் கொடுத்து அறிவுறுத்தி வந்தனர். ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் மேலும் கூடுதலாக நபர்களைப் கொண்ட பட்டியலை கொடுத்து இவர்களுக்கும் வீடு வேண்டும் என்று வற்புறுத்தி கூறினர்.
அதற்கு வருவாய்த்துறையினர் உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே வீடு வழங்கப்பட்டு, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்றவர்கள் ஆக்கிரமிப்பை அகற்றி கொள்ளுமாறு கூறினர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை வருவாய்த் துறையினர், காவல் துறையினர், நகராட்சி நிர்வாகத்தினர் தம்மணம்பட்டி சென்றனர். ஜேசிபி இயந்திரங்கள் மூலம் வீடுகளை அகற்ற செல்லும்பொழுது பெண்கள் திரண்டு வாக்குவாதம் செய்து, அனைத்து அதிகாரிகளையும் தடுத்தனர். அப்போது சந்திரா என்ற பெண் விஷ மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
அவரை காவல்துறையினர் கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். கீதா என்ற பெண் கத்தியை எடுத்து கையில் வைத்துக்கொண்டு வீட்டை காலி செய்ய வந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி மிரட்டினார். மேலும் 10க்கும் மேலான பெண்கள் கூடலூர் குமுளி நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், கலைந்து செல்லாமல் இருந்த ஆண், பெண் 15 பேர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதுபற்றி தாசில்தார் உதயராணியிடம் கேட்டபோது, கடந்த 2018-ஆம் ஆண்டில் இருந்து ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டி இருந்த நபர்களுக்காக வீடுகள் ஒதுக்கப்பட்டு விட்டது. தற்போது ஆக்கிரமித்துள்ள இடத்தை அகற்ற தொடர்ந்து 3 வருடங்களாக வாய்ப்பு கொடுத்தும் ஆக்கிரமிப்பை அகற்றாமல் இருந்தனர். இந்நிலையில் மாவட்ட அதிகாரிகள் உத்தரவின்பேரில் முழுமையாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன என்று தெரிவித்தார்.