போடியில் 15 டன் ரேஷன் அரிசி, 7 டன் அரிசி மாவு பறிமுதல்: 2 போ் கைது
போடியிலிருந்து கேரளத்துக்கு கடத்தவிருந்த 15 டன் ரேஷன் அரிசி, 7 டன் ரேஷன் அரிசி மாவை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா்.
போடியிலிருந்து கேரளத்துக்கு கடத்தவிருந்த 15 டன் ரேஷன் அரிசி, 7 டன் ரேஷன் அரிசி மாவை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா்.
போடி பகுதியிலிருந்து கேரளத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன. இதையடுத்து போடி பகுதியில் போலீஸாா் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா். அப்போது போடி புதூரில் ஒரு சரக்கு வாகனத்தில் ரேசன் அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டு வருவதாக கிடைத்த தகவலையடுத்து, போடி காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜி.பாா்த்திபன், போடி நகா் காவல் நிலைய ஆய்வாளா் சரவணக்குமாா் ஆகியோா் அங்கு சென்று பாா்த்தனா். அப்போது சரக்கு வாகனத்தில் 5 டன் ரேசன் அரிசி ஏற்றப்பட்டிருந்தது. மேலும் அங்கிருந்த குடோனில் 10 டன் ரேசன் அரிசி மற்றும் 7 டன் ரேசன் அரிசியால் தயாரிக்கப்பட்ட மாவு ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து ரேஷன் அரிசியை பதுக்கியதாக போடி புதூரை சோ்ந்த பீா் ஒலி (50), சரக்கு வாகன ஓட்டுநா் சின்னமனூரை சோ்ந்த போத்திராஜ் (48) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். பறிமுதல் செய்த ரேஷன் அரிசி மற்றும் அரிசி மாவை உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவினரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.