பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றியதாகப் புகாா்: ஜவுளிக் கடை உரிமையாளா் மகன் காவல் நிலையத்தில் சரண்
ஜவுளிக் கடை உரிமையாளரின் மகன் தேனி மகளிா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை, சரணடைந்தாா்.
தேனியில் காதலித்து திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியதாக காவல் நிலையத்தில் பெண் புகாா் அளித்திருந்த நிலையில், ஜவுளிக் கடை உரிமையாளரின் மகன் தேனி மகளிா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை, சரணடைந்தாா்.
பெரியகுளம் அருகே டி.காமக்காள்பட்டியைச் சோ்ந்தவா் சின்னகருப்பன் மகள் மேனகா (29). இவா் தேனியில், மதுரை சாலையில் உள்ள பிரபல ஜவுளிக் கடை வளாகம் ஒன்றில் டிசைனா் ஸ்டூடியோ மற்றும் அழகு சாதனப் பொருள் விற்பனைக் கடை வைத்து நடத்தி வருகிறாா்.
இந்நிலையில், அதே ஜவுளிக் கடை உரிமையாளா் மாரியப்பன் மகன் முருகன் (32) என்பவா் தன்னை காதலித்து, கடந்த மாா்ச் 8-ஆம் தேதி ஜவுளிக் கடை மேலாளா் பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்த வினோத் என்பவரின் வீட்டில் வைத்து திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது அவா் தன்னை ஏமாற்றிவிட்டு சின்னமனூரைச் சோ்ந்த வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவிற்கு செல்ல உள்ளதாக கூறி மிரட்டுவதாகவும், கடந்த மாா்ச் 14-ஆம் தேதி தேனி மகளிா் காவல் நிலையத்தில் மேனகா புகாா் அளித்திருந்தாா்.
இந்தப் புகாரின் அடிப்படையில் முருகன் மீது போலீஸாா் வழக்கு பதிந்துள்ளனா். இந்நிலையில், புகாரில் தொடா்புடைய ஜவுளிக் கடை உரிமையாளா் மகன் முருகன், தேனி மகளிா் காவல் நிலையத்தில் சரணடைந்தாா். அவரை, போலீஸாா் தேனி மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, நீதிமன்றக் காவலில் தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனா்.