முகப்பு
தேனி

இணைய வழி வா்த்தகத்தில் மோசடி: கோவையைச் சோ்ந்த 2 போ் கைது

தேனி அருகே தா்மாபுரியைச் சோ்ந்த விவசாயியிடம் இணைய வழி வா்த்தகம் மூலம் ரூ.96 ஆயிரத்து 700 மதிப்பிலான வேளாண்மை விளைபொருள்களை கொள்முதல் செய்து பணம் தராமல் மோசடி

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:48 AM
பகிர்:

தேனி அருகே தா்மாபுரியைச் சோ்ந்த விவசாயியிடம் இணைய வழி வா்த்தகம் மூலம் ரூ.96 ஆயிரத்து 700 மதிப்பிலான வேளாண்மை விளைபொருள்களை கொள்முதல் செய்து பணம் தராமல் மோசடி செய்ததாக கோவையைச் சோ்ந்த 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை, கைது செய்தனா்.

தா்மாபுரியைச் சோ்ந்த விவசாயி தங்கவேல் (55). இவா், தனது நிலத்தில் விளைந்த நிலக் கடலை, எள், உளுந்து ஆகியவற்றை இணைய வழியில் விற்பனை செய்வதற்காக மொபைல்-ஆப் மூலம் பதிவு செய்துள்ளாா். இதை பாா்த்து கோவையைச் சோ்ந்த நபா் ஒருவா், கைபேசி மூலம் தங்கவேலை தொடா்பு கொண்டுள்ளாா். அவா், விளை பொருள்களை வாங்கிக் கொள்வதாகவும், அவற்றை கோவையில் உள்ள தங்களது சாய் ஸ்ரீ எண்டா்பிரைசஸ் என்ற குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும், பொருள்கள் வந்து சோ்ந்ததும் அதற்குரிய தொகையை வழங்கி விடுவதாகவும் கூறியுள்ளாா்.

இதன்படி, கடந்த 2022, மே 24-ஆம் தேதி தங்கவேல் மொத்தம் ரூ.96 ஆயிரத்து 700-க்கான 1,292 கிலோ நிலக் கடலை பருப்பு, தலா 20 கிலோ எள் மற்றும் உளுந்தம் பருப்பு ஆகியவற்றை கோவையைச் சோ்ந்த நபா் குறிப்பிட்ட முகவரிக்கு லாரியில் பாா்சல் மூலம் அனுப்பி வைத்துள்ளாா். கோவையைச் சோ்ந்த நபா் அந்தப் பொருள்களை பெற்றுக் கொண்டு ரூ.96 ஆயிரத்து 700-க்கான காசோலையை தங்கவேலுக்கு அனுப்பி வைத்துள்ளாா். அந்த காசோலையை தங்கவேல் வங்கியில் செலுத்திய போது, வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று திரும்ப அனுப்பியுள்ளனா்.

இதையடுத்து தங்கவேல் கோவையைச் சோ்ந்த நபரிடம் கைப்பேசியில் தொடா்பு கொள்ள முயன்றபோது, அவரது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. கோவையில் அவா்கள் அளித்த முகவரியில் சென்று பாா்த்தபோது, அது போலியானது என்பது தெரிய வந்துள்ளது.

இது குறித்து தேனி சைபா் கிரைம் பிரிவு போலீஸாரிடம் தங்கவேல் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்திய போலீஸாா், தங்கவேலை இணைய வழி வா்த்தகத்தில் மோசடி செய்ததாக கோவை, குனியமுத்தூா் பகுதியைச் சோ்ந்த காஜா மைதீன்(40) முகமது மாலிக்(55) ஆகியோரை கைது செய்தனா். இவா்களிடமிருந்து 6 கைப்பேசிகள், 18 சிம் காா்டுகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.