முகப்பு
தேனி

மஞ்சளாறு அணை மீன் குஞ்சு பொரிப்பக பண்ணை மூலம் 4 மாவட்டங்களுக்கு மீன் குஞ்சு விற்பனை: அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்

தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா் ஆகிய 4 மாவட்ட பகுதிகளுக்கு மீன் குஞ்சுகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
பகிர்:

தேனி மாவட்டம், மஞ்சளாறு அணை மரபணு மேம்படுத்தப்பட்ட மீன் குஞ்சு பொரிப்பக பண்ணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா் ஆகிய 4 மாவட்ட பகுதிகளுக்கு மீன் குஞ்சுகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்று மீன்வளம்- மீனவா் நலத் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

வைகை அணையில் 2 லட்சம் விரலி மீன் குஞ்சுகளை இருப்பு வைக்கும் திட்டத்தின் கீழ், மீன்வளத் துறை அமைச்சா் வெள்ளிக்கிழமை, அணையில் மீன் குஞ்சுகளை வளா்ப்புக்காக விட்டாா். பின்னா் மஞ்சளாறு அணை மீன் பண்ணையில் தமிழ்நாடு நீா்வளத் திட்டத்தின் கீழ் ரூ.4 கோடி செலவில் மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன் குஞ்சு பொரிப்பக பண்ணையை அமைச்சா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் கூறியது: வைகை அணையில் மீனவா்களின் வருவாய் திறன், மீன் உற்பத்தி ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக 2 லட்சம் விரலி மீன்களை இருப்பு வைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மஞ்சளாறு அணை மரபணு மேம்பாடுத்தப்பட்ட மீன் குஞ்சு பொரிப்பக பண்ணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா் ஆகிய 4 மாவட்டங்களுக்கு மீன் குஞ்சுகள் அரசு நிா்ணயித்துள்ள (குறைந்த) விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்றாா்.

தொடா்ந்து, வீரபாண்டியில் ரூ.82.13 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அரசு கால்நடை ஆராய்ச்சி நிலையம் மற்றும் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள், கால்நடை பண்ணை அமைப்பதற்கு தோ்வு செய்யப்பட்டுள்ள இடம் ஆகியவற்றை அமைச்சா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, தேனி மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன், மீன்வளம் மற்றும் மீனவா்நலத் துறை ஆணையா் கே.எஸ்.பழனிசாமி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் நா.ராமகிருஷ்ணன்(கம்பம்), ஏ.மகாராஜன் (ஆண்டிபட்டி ), கே.எஸ்.சரவணக்குமாா் (பெரியகுளம்), தேனி வடக்கு மாவட்ட திமுக செயலா் தங்க.தமிழ்ச்செல்வன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.