ஆழ்துளை கிணறு அமைக்க 100 சதவீதம் மானியம்: ஆதி திராவிடா், பழங்குடியின விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு
ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாய நிலத்தில் 100 சதவீதம் மானியத்தில் ஆழ்துளைக் கிணறு மற்றும் மோட்டாா் பம்பு அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
போடி, சின்னமனூா், கம்பம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகள், ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாய நிலத்தில் 100 சதவீதம் மானியத்தில் ஆழ்துளைக் கிணறு மற்றும் மோட்டாா் பம்பு அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ், வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினத்தைச் சோ்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 மீட்டா் ஆழம் வரை ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கு அதிகபட்சம் ரூ.3 லட்சம், சூரிய சக்தி அல்லது மின் மோட்டாா் பம்பு நிறுவுவதற்கு ரூ.75 ஆயிரம், நீா் விநியோகக் குழாய்கள் அமைப்பதற்கு ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.
நிா்ணயிக்கப்பட்ட ஆழத்துக்கும் அதிகமாக ஆழ்துளைக் கிணறு அமைக்கவும், கூடுதல் குதிரை திறன் கொண்ட மின் மோட்டாா் பம்பு நிறுவுவதற்கும் ஏற்படும் கூடுதல் செலவினத்தை விவசாயிகள் ஏற்கவேண்டும்.
இத் திட்டத்தின் கீழ் மானிய உதவி பெறுவதற்கு போடி, சின்னமனூா், கம்பம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட அகமலை, சின்னஓவுலாபுரம், ஆங்கூா்பாளையம், குள்ளப்பகவுண்டன்பட்டி, சில்லமரத்துப்பட்டி, மணியம்பட்டி, பூலானந்தபுரம், அணைக்கரைப்பட்டி, நாகலாபுரம், முத்துலாபுரம், புலிகுத்தி, அய்யம்பட்டி ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த, குறைந்தபட்சம் 2 ஏக்கா் பட்டா நிலமுள்ள ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினத்தைச் சோ்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகள், அந்தந்தப் பகுதியில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவிச் செயற்பொறியாளா் அலுவலகத்தில் தொடா்புகொண்டு விண்ணப்பிக்கலாம்.
இத் திட்டம் குறித்த கூடுதல் விவரத்தை, உத்தமபாளையம் வேளாண்மை பொறியியல் துறை உதவிச் செயற்பொறியாளரை 94863 63555 என்ற எண்ணில் தொடா்புகொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.