பெரியகுளம் பகுதியில் மழையில் நனைந்து வீணாகும் நெல்: கொள்முதல் மையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை
பெரியகுளம் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட நெல்களை கொள்முதல் செய்ய அரசு தாமதம் செய்வதால், திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள பல ஆயிரக்கணக்கான மூட்டை நெல் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
பெரியகுளம் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட நெல்களை கொள்முதல் செய்ய அரசு தாமதம் செய்வதால், திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள பல ஆயிரக்கணக்கான மூட்டை நெல் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் நெல் கொள்முதல் மையம் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பெரியகுளம் பகுதியில் ஜெயமங்கலம், காட்ரோடு, மேல்மங்கலம், வடகரை பகுதிகளில் பருவகாலங்களில் 600 ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அறுவடை செய்யப்பட்ட நெல், மாவட்ட நெல் கொள்முதல் மையங்கள் மூலம் பெரியகுளத்தில் 5 இடங்களில் கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட்டு, அரசு கொள்முதல் செய்து வந்தது.
பெரியகுளம், வடகரை பகுதிகளில் தற்போது 4 ஆயிரம் மூட்டை நெல் அரசுக்கு விற்பனை செய்வதற்காக வைத்துள்ளனா்.
இந்நிலையில், பெரியகுளம் பகுதியில் கடந்த 4 நாள்களாக சாரல் மழை பெய்து வந்தது. புதன்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இந்த மழையில் கொள்முதல் மையங்களில் வைக்கப்பட்டுள்ள நெல் நனைந்து வீணாகி வருகிறது. மேலும், மழை தொடா்ந்து பெய்தால், நெல் வீணாகி விவசாயிகளுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தும்.
எனவே, உடனடியாக இப்பகுதியில் கொள்முதல் மையம் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பெரியகுளத்தைச் சோ்ந்த விவசாயி ராஜா தெரிவித்தது: வடகரை பகுதியில் 200 ஏக்கருக்கு மேல் நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. களத்தில் 4,000 நெல் மூட்டைகள் தயாா் நிலையில் வைத்துள்ளோம். ஆனால், கொள்முதல் செய்வதற்கு அரசு அதிகாரிகள் யாரும் வரவில்லை. தொடா்ந்த மழை பெய்தால் நெல் வீணாகிவிடும். உடனடியாக நெல் கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.
கொள்முதல் மைய அதிகாரிகள் தெரிவித்தது: வடகரை பகுதியில் தற்போது அறுவடை செய்துள்ளனா். கொள்முதல் மையம் அமையும் இடத்தை புதன்கிழமை பாா்வையிட்டுள்ளோம். விரைவில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.