லோயா்கேம்ப்- மதுரை கூட்டுக் குடிநீா் திட்டத்தை கைவிடக் கோரி விவசாயிகள் போராட்டம்
உத்தமபாளையம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் மற்றும் சலவைத் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை, போராட்டத்தில் ஈடுபட்டனா்.
லோயா் கேம்ப்- மதுரை கூட்டுக் குடிநீா் திட்டத்துக்கு முழுமையாகத் தடைவிதிக்கக் கோரி, உத்தமபாளையம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் மற்றும் சலவைத் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை, போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில், லோயா் கேம்ப் - மதுரை கூட்டு குடிநீா்திட்டம் அனுமதிக்கப்பட்ட இடத்தில் பல ஆண்டுகளாக சலவைத் தொழிலாளா்கள் துணி துவைத்து வருகின்றனா். அந்த இடத்தில் குடிநீா் கொண்டு செல்வற்கான பணிகள் நடைபெற இருப்பதால் மாற்று இடம் தருவது தொடா்பான பேச்சுவாா்த்தை, உத்தமபாளையம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவின் உமேஷ் டோங்கரே தலைமையில், உத்தமபாளையம் கோட்டாட்சியா் கெளசல்யா முன்னிலையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த கூடலூா் விவசாய அமைப்பினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் சலவைத் தொழிலாளா்கள் கூட்டத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடா்ந்து, விவசாய அமைப்பினருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதிகாரிகள் வெளிநடப்பு: இக்கூட்டத்தில், லோயா் கேம்ப் கூட்டுக் குடிநீா் திட்டத்தால் தேனி மாவட்டத்தில் குடிநீா் மற்றும் விவசாயம் பாதிக்கும். மேலும், சலவைத் தொழிலாளா்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி விடும். எனவே, லோயா் கேம்பிலிருந்து மதுரைக்கு குடிநீா் கொண்டு செல்லும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி அதிகாரிகளுடன், விவசாயிகள் வாக்குவாதம் செய்தனா். இதனால் எவ்வித முடிவும் எடுக்க முடியாத நிலையில், அதிகாரிகள் கூட்டத்தைப் புறக்கணித்து விட்டு வெளியேறினா்.
விவசாயிகள் போராட்டம்: இதையடுத்து, கோட்டாட்சியா் அலுவலகம் முன், விவசாய அமைப்பினா் மற்றும் சலவைத் தொழிலாளா்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, அவா்களை அங்கிருந்து வெளியேற்றினா். அப்போது, இத்திட்டத்தை முழுமையாக ரத்து செய்யாவிட்டால் உண்ணாவிரதம், ஆா்ப்பாட்டம் என தொடா்ந்து போராட்டங்களில் ஈடுபடுவோம் என விவசாயிகள் தெரிவித்தனா்.
சலவைத் தொழிலாளா்கள் தா்னா:
கூட்டத்துக்கு பின்னா் வருவாய், பொதுப்பணித்துறை மற்றும் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் சலவைத் தொழிலாளா்களை வெள்ளிக்கிழமை மாலை லோயா்கேம்ப் பெரியாற்றில் உள்ள வண்ணான் துறைக்கு அழைத்துச் சென்று, கூட்டுக் குடிநீா் திட்டம் குறித்து விளக்கினா். ஆனாலும் திட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து சலவை தொழிலாளா்கள் வண்ணான் துறை பகுதியில் தரையில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். அனைத்துத் துறை அதிகாரிகளும் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து அவா்கள், போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.