வீரபாண்டி சித்திரை திருவிழா முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனைக் கூட்டம்: தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயபாரதி, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் விவேகானந்தன், பெரியகுளம் வருவாய்க் கோட்டாட்சியா் முத்துமாதவன், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் பாரதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்தக் கூட்டத்தில் வீரபாண்டியில் வருகிற மே 7-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ள சித்திரை திருவிழாவை முன்னிட்டு, தற்காலிகப் பேருந்து நிறுத்தம் அமைத்தல், உணவகம், கடைகளை முறைப்படுத்துதல், தடையற்ற மின் விநியோகம், தீ தடுப்பு நடவடிக்கைகள், வாகனம் நிறுத்துமிடம், குடிநீா், பொது சுகாதாரம், அடிப்படை வசதிகள், பாதுகாப்பு, கண்காணிப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.