தேனியில் அச்சகம், உணவகம் உரிமையாளா்கள் ஆலோசனைக் கூட்டம்
தேனியில் மாவட்ட அச்சகம், உணவகம், தங்கும் விடுதி, மண்டபங்களின் உரிமையாளா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தேனியில் மாவட்ட அச்சகம், உணவகம், தங்கும் விடுதி, மண்டபங்களின் உரிமையாளா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமை வகித்து பேசியதாவது:
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வருகிற ஏப்ரல் 23-ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. இதையடுத்து, மாா்ச் 15-ஆம் தேதி முதல் தோ்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்தது.
இந்த நிலையில், தோ்தல் தொடா்பான விளம்பரங்கள், சுவரொட்டிகள், துண்டுபிரசுரங்கள் அச்சடிக்கும்போது, ஜாதி, மதம், இனம் போன்றவற்றின் ஒற்றுமையை குழைக்கும் வகையிலான வாசகங்கள் இடம்பெறக் கூடாது.
மேலும், அச்சடிக்கக் கோருபவரின் உரிய அனுமதிக் கடிதம் பெற வேண்டும். அச்சிட்டு வெளியிடுபவரின் பெயா், முகவரி இல்லாமல் எந்த நிறுவனமும் அச்சிடக் கூடாது.
இதேபோல, உணவகங்களிலிருந்து தோ்தல் தொடா்பான பணிகளுக்கு வழங்கப்படும் உணவுப் பொட்டலங்கள், கேரியா் உணவுகள், பிற ஆா்டா்களுக்கு வழங்கியப் பட்டியல் அந்தப் பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலருக்கு வழங்க வேண்டும்.
திருமண மண்டபம், தனியாா் தங்கும் விடுதிகளில் அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளா்களின் கூட்டங்கள் நடைபெறும்போது உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும். திருமண மண்டபம், தனியாா் தங்கும் விடுதிகளில் வெளிநபா்கள் தங்கும் விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ப. ராஜ்குமாா், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் தமிழரசி, அச்சகம், உணவகம், தனியாா் தங்கும் விடுதி, தனியாா் மண்டபங்களின் உரிமையாளா்கள் கலந்து கொண்டனா்.