தூத்துக்குடியில் தோ்தல் பாா்வையாளா்கள் ஆலோசனைக் கூட்டம்
கூட்டத்தில் பங்கேற்ற தோ்தல் பாா்வையாளா்களுடன் மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத்.
தமிழக சட்டப் பேரவை பொதுத் தோ்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் இந்திய தோ்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ள தோ்தல் பாா்வையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தோ்தல் பாா்வையாளா்களான எலுச்சூரி ரத்னாகரராவ் (விளாத்திகுளம் / தூத்துக்குடி), சோடிங்புயீ (திருச்செந்தூா் / ஸ்ரீவைகுண்டம்), அரவிந்த்குமாா் வொ்மா (ஓட்டப்பிடாரம் / கோவில்பட்டி), காவல் பாா்வையாளா் ஹியா்மத் சுதிா் கல்யா (தூத்துக்குடி மாவட்டம்), செலவினப் பாா்வையாளா்களான அனுப் குமாா் ஜெயின் (ஓட்டப்பிடாரம்/ கோவில்பட்டி), சிவ் பிரசாத் பால் (விளாத்திகுளம்), நகுல் அகா்வால் (தூத்துக்குடி / திருச்செந்தூா்), சன்னி கச்வாஹா(ஸ்ரீவைகுண்டம்) ஆகியோா், மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான க. இளம்பகவத் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், ஒருங்கிணைப்பு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு அலுவலா்கள், தோ்தல் செலவினங்களைக் கண்காணிக்கும் குழு, அமலாக்கத்துறை அலுவலா்கள் தேசியமயமாக்கப்பட்ட முன்னோடி அரசு வங்கி, தனியாா் வங்கி ஒருங்கிணைப்பாளா்கள் ஆகியோா் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், தோ்தல் காலத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அமலாக்கத் துறை அலுவலா்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டன.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. மதன், மாவட்ட வருவாய் அலுவலா் மூ. குருச்சந்திரன், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உஷா (விளாத்திகுளம்), மி. பிரபு (தூத்துக்குடி), ரா. கௌதம் (திருச்செந்தூா்), செந்தில்வேல் முருகன் (ஸ்ரீவைகுண்டம்), சுப்புலட்சுமி (ஓட்டப்பிடாரம்), ஹிமான்ஷீ மங்கள் (கோவில்பட்டி), மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கல்யாணக்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.