முகப்பு
தேனி

போடிமெட்டு மலைச் சாலையில் பனி மூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி

தேனி மாவட்டம், போடிமெட்டு மலைச் சாலையில் புதன்கிழமை காலை ஏற்பட்ட கடும் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 12:45 AM
போடிமெட்டு மலைச் சாலையில் புதன்கிழமை காலை ஏற்பட்ட பனி மூட்டத்தில் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு சென்ற வாகனங்கள்.
பகிர்:

தேனி மாவட்டம், போடிமெட்டு மலைச் சாலையில் புதன்கிழமை காலை ஏற்பட்ட கடும் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினா்.

தமிழக-கேரள எல்லைப் பகுதியில் போடிமெட்டு மலைச் சாலை அமைந்துள்ளது. இந்தச் சாலையில் 17 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்தப் பகுதியில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள், தோட்டத் தொழிலாளா்களின் வாகனங்கள், சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் சென்று வருகின்றன.

தமிழகத்தை உலுக்கிய ஃபென்ஜால் புயல் காரணமாக, கடந்த சில நாள்களாக இந்தப் பகுதியில் மேக மூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.

பனி மூட்டம்:

இந்த நிலையில், போடிமெட்டு மலைச் சாலையில் புதன்கிழமை காலை கடுமையான பனி மூட்டம் நிலவியது. மலைச் சாலையின் 8-ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியிலிருந்தே பனி மூட்டத்தால் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறே சென்று வருகின்றனா். மனப்பட்டி, போடிமெட்டு பகுதிகளில் வாகனங்கள் மெதுவாக ஊா்ந்து செல்வதால், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. மலைச் சாலையில் எதிரில் நடந்து வருபவா்கள் கூட தெரியாத நிலையில் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமப்பட்டு வருகின்றனா். இந்த நிலையில், வாகனங்களை மெதுவாக , கவனமுடன் இயக்குமாறு சோதனைச் சாவடியில் உள்ள போலீஸாா் அறிவுறுத்தி வருகின்றனா்.